457-ம் பக்கத்தில் 403-ம் பாராவில் என்ன இருக்கிறது? காவிரி தீர்ப்புகுறித்து பெ.மணியரசன் பகீர்

உச்ச நீதிமன்றத்  தீர்ப்பில், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரின் அளவு 177.25 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியது. ஆனாலும், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியதால், அரசியல் தலைவர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எனப் பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள்.

ஆனால் 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம்குறித்து எதுவும் சொல்லப்படவே இல்லை' என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதிர்ச்சியூட்டுகிறார், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன்.

காவிரி- பெ.மணியரசன்

இதுகுறித்து நாம் அவரிடம் பேசியபோது, ‘தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் ஒரு அம்சம்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படவில்லை. தீர்ப்பைப் படித்துப்பார்த்தேன். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எதுவும் சொல்லப்படவே இல்லை. தீர்ப்பின் 457-ம் பக்கத்தில் 403-ம் பாராவில், ‘இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அந்த அமைப்பு எப்படிச் செயல்பட வேண்டும் என்றோ, அதன் அதிகாரங்கள் குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை. கண்டிப்பாக தமிழ்நாட்டிற்குப் பாதகமான, அதிகாரமற்ற ஓர் அமைப்பைதான் மத்திய அரசு உருவாக்கும்.

தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நன்மையும் நிகழாது. காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்ட மேலாண்மை வாரியம் என்பது, தற்சார்பான அதிகாரங்கள் கொண்டது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான், தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைப்  பெற முடியும். இதனால்தான், கடந்த பத்தாண்டுகளாக இதை அமைக்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்திவந்தோம். மத்திய அரசு போலவே, உச்ச நீதிமன்றமும் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்துவிட்டது. தனது தீர்ப்பில், மேலாண்மை வாரியம்குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதுவும் சொல்லப்படவே இல்லை. இந்த உண்மையை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!