யானைகளை விரட்ட தேனீக்களை பயன்படுத்துகிறது வனத்துறை!

மலையோரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் தேனீக்கள் வளர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார். 

வனத்துறை அதிகாரி வெங்கடேஷ்

வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக, நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் கூட்டமாக நுழையும் யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதுடன், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை வேருடன் பிடுங்கி எறிந்து நாசம் செய்கின்றன. ஒவ்வொரு வருடமும் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு இது பெரும் சோதனையாகவே இருக்கிறது.

அதனால் யானைகளைக் காட்டுக்குள் விரட்ட இரவு முழுவதும் விவசாயிகள் பந்தம் ஏந்தியபடி காவல் இருக்கிறார்கள். யானைகள் வரும்போது பட்டாசு வெடித்து சத்தம் எழுப்பிக் காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்கிறார்கள். வனத்துறையினரும் விவசாயிகளுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துப் பேசிய களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரான வெங்கடேஷ், ’’மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. சுமார் 5 சதுர கி.மீ தூரத்துக்குள் அரிய வகையைச் சேர்ந்த 250 மூலிகைகள் வளர்ந்துள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் வளரும் தாவரங்களின் காரணமாகவே ஆண்டு முழுவதும் தாமிரபரணி நதி ஓடுகிறது. அதனால் அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். தாவரங்கள் இல்லாவிட்டால் நதி இல்லாமல் போய்விடும் என்பதைப் புரிந்துகொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். களக்காடு-முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள் வரை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது 50 பீட்களில் கேமரா பொருத்தி இருப்பதால் அதன் பதிவுகள் மூலம் சரியான எண்ணிக்கையைக் கண்டுபிடித்துவிட முடியும்.

மேலை நாடுகளில் விவசாயத்தைப் பாதிக்கும் யானைக்கூட்டங்களை விரட்ட தேனீக்களை வளர்த்து வருகிறார்கள். அதனால் மலையடிவார விவசாயிகளுடன் இணைந்து தேனீ வளர்ப்பு குறித்துப் பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு அவற்றை வளர்க்க ஒத்துழைப்பு வழங்குவோம். அதன்  மூலமாக யானைத் தொல்லையில் இருந்து விவசாயிகள் தப்ப முடியும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!