இந்த 4 பேரும் ஒன்றிணைந்தால்தான் மாநிலம் வளர்ச்சியடையும்! சொல்கிறார் புதுச்சேரி அமைச்சர்

"ஆளுநர் கிரண்பேடியுடன் சுமுகமாகச் செயல்படுவதையே எங்கள் அமைச்சரவை விரும்புகிறது. தற்போது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்று புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகக் கிரண்பேடி பதவியேற்றது முதல் அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடுமையான அதிகார மோதல் போக்கு நீடித்து வந்தது. இரு தரப்பினருக்குமான இந்த மோதல் போக்கினால் மக்கள் நலத் திட்டங்களும் மாநில வளர்ச்சியும் முடங்கிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இந்த விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும்விட கிரண்பேடியை விமர்சனங்களால் வறுத்தெடுத்தவர் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி.

இந்நிலையில் புதுச்சேரி துறைமுகத்திலிருந்து சரக்குகளை கையாள்வதற்காக நடைபெற்றுவரும் இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கந்தசாமி, "என்னுடைய துறை மூலமாக வழங்கப்பட்டு வரும்
இலவச அரிசி, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் அளிக்காமல் காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தது. தற்போது துணைநிலை ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு சுமுகமான உறவு நீடிக்கிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆளுநர் கிரண்பேடியுடன் சுமுகமாகச் செயல்படுவதையே அமைச்சரவை விரும்புகிறது. ஆளுநர், அமைச்சரவை மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். தற்போது அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.

அமைச்சரவைக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்த அமைச்சர் கந்தசாமி தற்போது தடாலடியாக ஆளுநரிடம் சரணடைந்திருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!