`மோடியின் 2 வாக்குறுதிகளும் பொய்யாகிவிட்டன' - தூத்துக்குடியில் பொங்கிய பிரகாஷ் காரத்

''பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரத் திட்டங்களால் தொழிலாளர்கள் யாரும் பலனடையவில்லை. பெரு முதலாளிகள்தான் அதீத பலனடைந்துள்ளார்கள். ஊழலை ஒழிப்போம், வருடந்தோறும் இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை அளிப்போம் என்று மோடி கூறிய இரண்டு வாக்குறுதிகளும் பொய்யாகிவிட்டன. மோடி அரசு மக்களிடம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.” என இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். 

prakash karath-  thoothukudi

இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடியில் இன்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டினை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தொடங்கிவைத்தார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பிரதமர் மோடியின் ஆட்சியில் மதவாத தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் 30 இஸ்லாமியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் காரத்- கூட்டம்

ஊழலை ஒழிப்போம் என அவர் சொன்னது பொய்யாகிவிட்டது. பிரான்ஸிலிருந்து ‘ரபேல்’ என்ற 36 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் உதிரி பாகங்களை பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நிறுவனம் என்ற பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் அரசு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அனில்அம்பானிக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்காக 21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார் மோடி. இந்த நிறுவனத்துக்கு உதிரி பாகம் தயாரிப்பில் எவ்வித முன் அனுபவமும் இல்லை. 

பிரகாஷ் காரத் - கூட்டம்

வருடத்துக்கு இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் கூறினார் மோடி. ஆனால், 4 வருடமும் சேர்த்து அவர் ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் 10 லட்சத்துக்கும் குறைவு. திரிபுராவில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 51 வேட்பாளர்களில் 41 வேட்பாளர்களை காங்கிரஸிலிருந்து அதீத விலைக்கு வாங்கியுள்ளார் மோடி. திரிபுரா சிறிய மாநிலம். காங்கிரஸுக்குச் செல்வாக்கு உள்ள இம்மாநிலத்தில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்காக பல ஆயிரம் கோடியைச் செலவழித்துள்ளது. இதற்காகக் கடந்த ஒரு வருடமாகவே சுமார் 50 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் களமிறக்கி உள்ளது பி.ஜே.பி. மோடி அரசின் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து போராட்டங்கள் நடத்தினால் மட்டுமே வரும் எம்.பி. தேர்தலில் இடதுசாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். தமிழகத்திலும் அரசியல் சூழல் மாறிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்திலும் இந்த வாய்ப்பை நமதாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!