வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/02/2018)

கடைசி தொடர்பு:18:20 (17/02/2018)

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்

மீன்

ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள ஊர் பொதுக் குளத்தில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மீன்

ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தில் ஊர் பொதுக்குளம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும், சுற்றுப் புறத்திலுள்ள வாய்க்கால் நீரும் அந்தக் குளத்தில் வந்து சேர குளம் நிரம்பியிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்தக் குளத்திலிருந்த லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்திருக்கின்றன. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், தற்போது வரை இந்தக் குளத்தை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீன்

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது இந்தக் குளத்து நீரில்தான் கலக்கிறது. ஒருவேளை இந்தக் கழிவுநீரில் ஆசிட் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருள்கள் ஏதேனும் இருந்து, அது குளத்தில் கலந்திருந்தால் இந்த மீன்கள் இறந்திருக்கலாம். ஆனால், உண்மையான காரணம் என்ன என்பதை  அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் தெரியவரும். சமீபத்தில் பெய்த மழையால் இப்பகுதியில் விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்றுவருகிறது. நிறைய ஆடு, மாடுகள் இந்தக் குளத்தின் அருகேதான் புல் மேய்ந்து வருகின்றன. ஒருவேளை இந்த நீரை அந்த ஆடு, மாடுகள் குடித்துவிட்டால், மீன்களுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இந்த ஜீவராசிகளுக்கும் ஏற்படும். எனவே, அதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகளும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட குளத்தை உடனடியாகப் பார்வையிட்டு, ஆய்வு செய்து சுத்தப்படுத்தி பகுதிவாசிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும்” என்றனர்.