வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (17/02/2018)

கடைசி தொடர்பு:16:48 (17/02/2018)

"காவிரி, யாருக்குச் சொந்தம்?" - தமிழக வாழ்வுரிமைக் கட்சி விளக்கம்

'காவிரி தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றமளிக்கிறது' என்று ரஜினிகாந்த் குரல் கொடுத்து அடுத்த நிமிடமே, கர்நாடகத்தில், அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டிருக்கிறது. காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஆதரவும் எதிர்ப்புமாக தமிழகச் சூழலில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் அனல் கிளப்பி வருகின்றன. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 'காவிரித் தீர்ப்பு... தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் - அநீதி!' எனக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இவ்விவகாரத்தில் 'மறைமுகமாகத் தேசியம் கலக்கப்பட்டிருக்கிறது' என்றதொரு புதிய கோணத்தையும் இக்கட்சியினர் முன்வைக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்

 

இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

''காவிரியைப் பொறுத்தவரை 1924 - ம் ஆண்டின் ஒப்பந்தம்தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதன்படி அன்று 575.68 டி.எம்.சி-யாக இருந்த தமிழகத்தின் பங்கு இந்த மேல்முறையீட்டு வழக்குத் தீர்ப்பின் மூலம்  404  டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்றால், இது மாபெரும் வரலாற்றுத் துரோகம்.

நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் குறிப்பிட்ட 205 டி.எம்.சி இறுதித் தீர்ப்பில், 192 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டது; அதுவும் இப்போது மீளாய்வுத் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

வேல்முருகன்

இதற்குக் காரணம் மோடி அரசுதான். காவிரி மேலாண்மை வாரியத்தை அது அமைக்காததிலிருந்தே இது அப்பட்டமாகத் தெரியவருகிறது. மேலும், இப்போது கர்நாடகத் தேர்தல் நடைபெறவுள்ள சமயம் பார்த்து இந்தத் தீர்ப்பை வெளியிடவைத்திருப்பதும் மோடி அரசுதான். மோடியின் கைப்பாவையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க அரசு இந்த வழக்கில் ஏனோதானோவென்று வாதாடியது மோடியின் சொற்படித்தான் என்பதும் புரிகிறது.

நீதிமன்றத் தீர்ப்புக்கும் நீதிபதிகளுக்கும் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாதுதான். அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் அதன் தலைமை நீதிபதி மீதே புகார் தெரிவித்ததை மறந்துவிட முடியாது. அந்தத் தலைமை நீதிபதியின் அமர்வுதான் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்பதையும் நினைக்காமலிருக்க முடியாது''எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், இந்தத் தீர்ப்பு குறித்த தனது பார்வையையும் அதன் தொடர்ச்சியாக 'தமிழக வாழ்வுரிமைக் கட்சி'க்கு எழும் சந்தேகங்களையும் கேள்விகளாக்கி அறிக்கையைத் தயாரித்துள்ளது. அதாவது, 

''முந்தையத் தீர்ப்பில் இல்லாத 'குடிநீர்' எனும் விடயத்தைக் கொண்டுவந்து, அதற்காகக் குறிப்பிட்ட அளவு டி.எம்.சி நீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியது எப்படி?

காவிரி நீர் குறித்த வழக்கில் அதற்குத் தொடர்பேயில்லாத ’நிலத்தடி நீர்’ என்பதைக் குறிப்பிட்டு, அது தமிழ்நாட்டில் இவ்வளவு இருப்பதாகக் காட்டி தமிழ்நாட்டுக்கான டி.எம்.சி அளவைக் குறைத்ததேன்?

காவிரி ஆறு

தண்ணீருக்குப் பதில் தமிழர்களின் வாயில் மண்ணைப் போடுவதைவிடவும் கொடிய ஒரு விடயம், 'மொழிவழி மாநிலம் என்ற அடிப்படையில் காவிரி எந்த மாநிலத்துக்கும் சொந்தமானதில்லை' என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாகும்.
அப்படியென்றால், பிறகு காவிரி யாருக்குத்தான் சொந்தம்?

காவிரிக்குச் சொந்தக்காரர்கள் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய இந்த நான்கு பங்காளிகளும்தாம். இது இந்திய ஒன்றியம் உருவாவதற்கு முன்பே உள்ள தொன்றுதொட்ட சொந்தம்.

ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டம்தான் அனைத்துக்கும் அடிப்படை; அந்தச் சட்டத்தையும் தீர்மானிப்பவர்கள் மக்கள். நாடாளுமன்றமோ நீதிமன்றமோ நிர்வாக எந்திரமோ எவையாக இருந்தாலும் அவை மக்களுக்குக் கட்டுப்பட்டவையே.
எனவே 'சட்ட முரண்' என்பது 'மக்களுக்கு எதிர்நிலை' என்றுதான் பொருள். இது காவிரி மீளாய்வு வழக்குத் தீர்ப்பில், 'தமிழர்களுக்கு எதிர்நிலை'யாக வெளிப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிர்நிலை'' எனக் கொதித்திருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
 


டிரெண்டிங் @ விகடன்