வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (17/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (17/02/2018)

கூட்டத்தில் மோதிக்கொண்ட அ.தி.மு.க-வினர்! - அதிர்ந்துபோன அமைச்சர் ராஜலட்சுமி

நெல்லையில் நடந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலையில் கட்சியினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு கைகலப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஒரு தரப்பினரை வெளியே அனுப்பிவிட்டுத் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டது. 

அ.தி.மு.க-வினர் கைகலப்பு

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நெல்லை மாநகர மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு இதுவரை யாரையும் நியமிக்காத நிலையில், அவைத்தலைவரான பரணி சங்கரலிங்கம் தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், மனோகரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். 

கூட்டம் தொடங்கியதும் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் பலரும் பேசினார்கள். நெல்லை மாநகராட்சி 17 வது வார்டு அ.தி.மு.க அவைத்தலைவரான கோ-ஆப்டெக்ஸ் ஆறுமுகம் பேசுகையில், `கட்சியின் நிர்வாகிகள் பலரும் பேசுகையில், ‘அம்மா நம்மை அநாதையாக விட்டுச் சென்றுவிட்டார்’ என்கிறார்கள். ஆனால், அம்மா யாரையும் அநாதையாக விட்டுவிடவில்லை. அப்படிப் பேசுகிறவர்கள் எல்லோருக்குமே பதவி கொடுத்திருக்கிறார். 

அம்மா கொடுத்த பதவியின் காரணமாகவே வெள்ளை வேட்டி சட்டையுடன் வெள்ளைக்கார்களில் ஒய்யாரமாக வலம் வர முடிகிறது. ஆனால், அந்தப் பதவிகளை வைத்துக்கொண்டு கட்சிக்காரர்களுக்கு எதையும் செய்வதில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கும் செயல். பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், தொண்டர்களுக்கு மட்டும் எதையும் செய்து கொடுப்பதில்லை’’ என்று பேசியதற்கு கூட்டத்தினரிடம் பலத்த வரவேற்புக் கிடைத்தது.

கோஷ்டி மோதல்

அதைத் தொடர்ந்து பேசிய பலரும் ஆறுமுகம் பேசியதை வழிமொழியும் வகையிலேயே பேசினார்கள். கட்சிப்பொறுப்பில் இருப்பவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சரும் எந்த உதவியும் செய்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே பேசினார்கள். இது பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது இருக்கையில் இருந்து எழுந்த கோ-ஆப்டெக்ஸ் ஆறுமுகம், எம்.பி-க்கள்கூட அடிக்கடி இங்கே வருகிறார்கள், செல்கிறார்களே கட்சியினருக்கு தவிர எதுவுமே செய்யவில்லை’ என்றார்.

அப்போது விஜிலா சத்யானந்த் எம்.பி-யின் உதவியாளரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான சி.பா.முருகன் ஆவேசமாக எழுந்து வந்து ஆறுமுகத்தை அடித்தார். இதில் அவரது சட்டை கிழிந்தது. இருவரும் ஒருவரையொருவர் ஆவேசமாகத் தாக்கியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் ஆறுமுகத்தை மட்டும் கூட்டம் நடந்த அரங்கில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அவரை வெளியே அனுப்பிய பின்னர் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டி சண்டை அடிதடியில் முடிவடைந்த சம்பவம் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.