`உங்களுக்குத்தான் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும்' - அ.தி.மு.க-வினரை குஷிப்படுத்திய அமைச்சர் ராஜலட்சுமி

அமைச்சர்கள் செல்லூர் ராஜு, செங்கோட்டையனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜலட்சுமி, அ.தி.மு.க தொண்டர்களுக்கு மட்டுமே அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் எனப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

அமைச்சரின் சர்ச்சை பேச்சு

தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் ஆளாளுக்கு பேசி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, தெர்மாகோல் மூலம் சர்வதேச அளவில் புகழ் அடைந்த அமைச்சர் செல்லூர் ராஜு, அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் பேசுகையில், `அ.தி.மு.க உறுப்பினர் அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும்’ எனத் தெரிவித்து அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பினார். 

அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் கவுந்தம்பாடியில் நடந்த ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன், `எதிர்காலத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசு வேலைகள் வழங்கப்படும். முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பான உத்திரவாதம் அளிக்கப்பட்டது’ எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த நிலையில் நெல்லையில் நடந்த அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பேசிய விவகாரம் எதிர்க்கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அவர் பேசுகையில், `இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும், கட்சித் தொண்டர்களுக்கு நிர்வாகிகள் உதவவில்லை என்றார்கள். அத்துடன், ஆட்சியின் நலத்திட்டங்கள் எதுவும் தொண்டர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்கள். 

நமது ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு எடுத்துக் கூறாமல் இருப்பதாலேயே அவர்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் கிடைக்காமல் இருக்கிறது. ஆட்சியின் நலத் திட்டங்கள் அனைத்தும் கட்சியினருக்கே கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும்’’ எனப் பேசினார். அரசின் அனைத்து உதவிகளும் அ.தி.மு.க-வினருக்கே கிடைக்க வேண்டும் என அவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!