`பழைய கட்சிகளுக்கு மவுசுதான்' - கூட்டத்தில் கலகலத்த ஜி.கே.வாசன்

புதிய கட்சிகளின் வருகையால் பழைய கட்சிகளுக்கு மவுசு தான். தமிழகத்தில் இனி கூட்டணி அமைக்காமல் யாரும் ஆட்சிக்கு அமைக்க முடியாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் நடந்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜி.கே.வாசன், ''காவிரி நதிநீர் பிரச்னையில் சுப்ரீம் கோர்ட்டு நியாயத்தின் அடிப்படையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பு விவசாயிகளுக்குப் பேரிடியும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விஷயத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழக விவசாயிகளுக்குத் தண்டனை கொடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு உள்ளது. 

காவிரி நதிநீர் வாசன்

நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயத்துக்குத் தண்ணீர் இன்றி தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை ரத்து செய்து, புதிய கடன்கள் கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் வழங்க வேண்டும். அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து, ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. தற்போதைய தீர்ப்பு தொடர்பாக மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யலாமா. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என்று தமிழக அரசு சட்ட வல்லுநர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க வேண்டும். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று கூறுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தை ஒரு போதும் பின்பற்றாத மாநிலமாக கர்நாடகா உள்ளது. 

தமிழகத்தில் உணவுப் பொருள்கள் கலப்படம் என்பது ஆபத்தானது. ஜவ்வரிசி, டீத்தூள் உள்ளிட்ட உணவுப்பொருள்களில் கலப்படம் அதிகமாக உள்ளது. அரசு இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தலைநகரான சென்னையில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ரஜினி, கமல் புதிய கட்சிகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்கள். அவர்கள் கட்சிகள் தொடங்கட்டும். கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை அறிவிக்கட்டும், பிறகு மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கட்டும். ஒவ்வொரு கட்சிக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர். அதைத் தாண்டி நடுத்தர வாக்காளர்களின் ஓட்டுகளைப் பெறவே அனைவரும் முயற்சி செய்கின்றனர். புதிய கட்சிகளின் வருகையால் பழைய கட்சிகளுக்கு மவுசுதான். தமிழகத்தில் இனி கூட்டணி அமைக்காமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இறுதியில் வர வாய்ப்பு உள்ளதாகவும் அத்துடன் தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தலும் வர உள்ளதாகப் பலர் கூறுகின்றனர். இதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!