அமைச்சர் பேனரைக் கிழித்து, கல்வெட்டை உடைத்த தினகரன் ஆதரவாளர் கைது..!

அன்னவாசல் அருகே அமைச்சரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களைக் கிழித்து கல்வெட்டை உடைத்து சேதப்படுத்திய டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் ஒருவரை போலீசார் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். இதனால், நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியை அடுத்த சொக்கம்பட்டியில் நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, ஊருக்குள் புதிதாகக் கட்டப்பட்ட  கலையரங்கங்கத்தைத் திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இதற்காக சொக்கம்பட்டி அ.தி.மு.க ஊராட்சி கழகச் செயலாளர் முருகையா மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவினர்  10-க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்துள்ளனர். புதிதாக திறக்கப்பட இருந்த கலையரங்கத்தின் முகப்பில் அமைச்சர் பெயருடன் கல்வெட்டும் பதித்து வைத்திருந்தனர். 
 


சொர்க்கம் பட்டி  ஊரைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் மணி, மகன் கதிரவன் (வயது-40) என்பவர் ,இன்று அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அத்தனை பேனரைக் கிழித்து கல்வெட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து இந்தச்செயலை செய்திருக்கிறார். விழா ஏற்பாடுகளை செய்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அன்னவாசல் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்..


அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார்,பேனரைக் கிழித்தவர்கள் குறித்து கிராமத்தில் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.  உடன் வந்த போலீசார் ஒருவர் சிறுநீர் கழிப்பதற்க்காக புதிய கலையரங்கம் கட்டப்பட்டிருக்கும் இடத்துக்கும் அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் சென்றிருக்கிறார்.அப்போது,அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஒரு நபர் போலீஸ் தன்னைப் பிடிக்க வருவதாக நினைத்து  தப்பி ஓடி இருக்கிறார்

உடனே சுதாரித்த போலீசார் அந்த நபரைத் துரத்திச் சென்றுப் பிடித்திருக்கிறது. விசாரணையில்,பெயர்  கதிரவன் என்றும் பிளக்ஸ் போர்டுகளை கிழித்து,கல்வெட்டை சேதப்படுத்தியது தான்தான் என்றும் தினகரன் ஆதரவாளர் என்றும் அந்த நபர் கூறி இருக்கிறார்.அதனைத் தொடர்ந்து கதிரவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை துரத்திச் சென்று இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், மற்றும் போலீசார்  மடக்கி பிடித்ததில், நாகராஜன் என்ற காவலரின் பத்தாயிரம் மதிப்புள்ள செல்போன் உடைந்தது.அத்துடன் அவரது மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் சேதமடைந்தது. 
‎இத்தனை பரபரப்புகளும் நடந்து முடிந்த பிறகு, கிழிந்துத் தொங்கிய அமைச்சரின் பேனர்களை அப்புறப்படுத்தி விட்டு, கொத்தனார் ஒருவரை அவசரமாக வரவழைத்து,சேதமான கல்வெட்டை இணைத்து, பழையபடி புதிய கலையரங்க முகப்புச் சுவரில் பதித்தார்கள். மாலை ஆறு மணிக்கு வந்த விஜயபாஸ்கர், கலையரங்கத்தைத் திறந்து வைத்துவிட்டு,வழக்கம்போல் அம்மாவின் நலத்திட்ட உதவிகளைப் பட்டியலிட்டுப் பேசிவிட்டுச்சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!