நீதிபதிகள் தீர்ப்புகள் மூலமாகதான் பேச முடியும் - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி

நீதிபதிகள் தீர்ப்புகள் மூலமாகதான் பேச முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தெரிவித்தார்.

தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி.

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா ஆண்டையொட்டி 50 வருடங்களாக வழக்கறிஞர் தொழில் செய்யும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர்களுக்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி எல்.கே.எஸ்.மகாலில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், ஜெயசந்திரன், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, திருச்சி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஜே.கே.ஜெயசீலன், துணைத்தலைவர் கமாலுதீன், இணை செயலாளர் சதீஷ்குமார், அரசு வழக்கறிஞர்கள் சம்பத்குமார், ஜெயராமன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்ட  இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, திருச்சி நீதிமன்றத்தில் நூலகத் திறந்து வைத்தவர், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்ததுடன், 50 ஆண்டுகாலம் பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கினார்.

அப்போது பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, “வழக்கறிஞர்கள் தொழிலில் மூத்தவர்களிடம் நாம் நிறைய கற்று கொள்ள வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வழிகாட்ட வேண்டும். மனுதாரர்களுக்காகதான் நாம் இருக்கிறோம். ஆகவே அவர்களிடம் சேவை மனப்பான்மையுடன் அணுக வேண்டும். வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேநேரத்தில் தரமான தீர்ப்புகளையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். நீதிபதிகள் தீர்ப்பின் மூலமாகதான் பேச முடியும். அதனால் தீர்ப்பினை நன்கு எழுத வேண்டும்.

தீர்ப்பை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். நீதிபரிபாலனத்தில் நீதிபதிகளுக்கு மட்டும் பங்கு கிடையாது. வழக்கறிஞர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இளம் வழக்கறிஞர்கள் சட்டத்தை ஆழ்ந்து படித்து தங்களது சட்ட அறிவை மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். நீதிபதிகள் தரமான தீர்ப்புகளை வழங்க இளம் வழக்கறிஞர்கள் துணை நிற்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!