வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (18/02/2018)

கடைசி தொடர்பு:15:20 (18/02/2018)

"மத்திய,மாநில அரசுகளின் மௌனத்தைக் கலைக்கவே ஆர்ப்பாட்டம்!" - நெடுவாசல் மக்கள்!நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால், அரசிடம் இருந்து  எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த மக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேறவில்லை. மத்திய-மாநில அரசுகள், நெடுவாசல் மக்களின் வாழ்வாதாரத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றன. இதனால் மனம் வெறுத்துப்போன அந்தப் பகுதி மக்கள் ஒருமித்த குரலுடன், அடுத்தக்கட்டப் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.

நெடுவாசல் ஆர்ப்பாட்டம்ஒரு போகத்திற்கே வழியின்றித் தவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகம் விளையும் ஒரு வளமான கிராமம் நெடுவாசல். சுற்றிலும் பசுமை...பசுமை.. பசுமையைத் தவிர வேறில்லை. ஆடு, மாடு, கோழி, முயல் என்று வீட்டுக்கு வீடு குட்டி மிருகக்காட்சி சாலையே இருக்கிறது. பயிர்களின் பச்சையம் வாடை காற்றில் எப்போதும் கலந்திருக்கிறது. அதில் மாட்டு மூத்திரத்தின் வாடையும், ஆட்டுப் புழுக்கைகளின் வாடையும்கூட கலந்திருக்கிறது. அங்கு வசிக்கும் சாமானியர்கள்கூட, பாசாங்கு இல்லாத வாழ்க்கையை மிக இயல்பாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். உழவுத் தொழிலில் தலைமுறை அறிவும் அனுபவமும் உலக வாழ்க்கையில் அறியாமையும் அப்பாவித்தன்மையும் கொண்ட எளிய மனிதர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்கள் மீதுதான்  கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம்  இரவு புயலாக  அந்தச் செய்தி தாக்கியது. நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்ற அறிவிப்புதான் அது. ஹைட்ரோ கார்பன் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க வாய் வராத அந்த மக்களுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது விளைநிலத்தையும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் திட்டம் என்பது சில மணி நேரத்தில் தெரியவந்தது. கொதித்தெழுந்த அவர்கள்  பிப்ரவரி 16 ம் தேதி முதல் போராட்டத்தைத் தொடங்கினர். இத்திட்டத்திற்கு  எதிராக அவர்கள் எழுப்பிய முழக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவ, சுமார்  70 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் குடும்பம் குடும்பமாகப் புறப்பட்டு  போராட்டக் களத்தில் வந்து அமர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு, ஒரே இடத்தில் ஒரே குரலில் நடத்திய போராட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் இது என்பதால் ஊடகங்கள் அந்தச் சிறிய கிராமத்தில் குழுமிவிட்டன.நெடுவாசல் போராட்டம்

ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களைத் தவிர, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், வைகோ, சீமான் என அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நெடுவாசலுக்கு வந்து மக்களின்  போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். அதன்பின் 'நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம்' என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் அளித்த வாக்குறுதியை அடுத்து நெடுவாசல் மக்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர். முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என நெடுவாசல் கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மொத்தம் 196 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைசியில் நடத்திய இரண்டாம் கட்டப் போராட்டத்துகுப் பிறகுதான் அரசு அசைந்து கொடுத்தது. 'கடந்த வருடம்  டிசம்பர் மாதத்துக்குள்ளாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை முழுவதுமாக மூடி, நிலத்தின் உரிமையாளர்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்படும்' என்று மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால்,அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் மத்திய-மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் விஷயத்தில் அழுத்தமான மௌனம் சாதிப்பதும் நெடுவாசல் மக்களை கோபமடையச் செய்திருக்கிறது. விளைவு? அடுத்தக் கட்டப் போராட்டத்தை நடத்த நாள் குறித்து விட்டார்கள் நெடுவாசல் போராட்டக்குழுவினர்.

"மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன்  எடுக்கும் திட்டத்தை உடனயாகக் கைவிட வேண்டும்" என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக  மௌனம் காக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்  பிப்ரவரி 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுவட்டார கிராம மக்களை ஒன்று திரட்டி முதல்கட்டமாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார்கள். இந்தப் போராட்டம் பற்றி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கத்தின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான தங்க.கண்ணன் என்பவரிடம் பேசினோம்.

"நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்து ஒரு வருடமாகியும் அதனை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை.இதனைக் கண்டித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரியும்  ஒரு கண்டன ஆர்பாட்டத்தை முதற்கட்டமாக  பிப்ரவரி 18-ல்  நடத்த  முடிவு செய்துள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகலில் தொடங்கி  மாலை ஆறு மணி வரை நடைபெறும். நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள்  'சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி தருகிறோம்' என்றார்கள். ஆனால் அதுபோன்ற எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதுபோல், ஆழ்துளைக் கிணறுகளை மூடியும், அப்புறப்படுத்தியும் மீண்டும் அதனை விவசாய நிலங்களாக மாற்றித் தருவதாக  மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தார். அதுவும் இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை. இதனையெல்லாம் அரசுக்கு நினைவுபடுத்தவே இந்த ஆர்பாட்டத்தை நடத்துகிறோம்"என்றார்..

இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷிடம் விளக்கம் பெற பலமுறை முயற்சி செய்தோம். பலனில்லை. மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆடசியர் தன் விளக்கத்தை தந்தால் அதனையும் பதிவு செய்யக் காத்திருக்கிறோம்.


டிரெண்டிங் @ விகடன்