'ரவுடிக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த இன்ஸ்பெக்டர்' - சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படம்!

சேலத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்பெக்டர் கருணாகரன்

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் கருணாகரன். மதுரையை சேர்ந்தவர். கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார். காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் அவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அறைக்கு சில ரவுடிகளை அவர் அழைத்து வந்தார். அன்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடி சுசீந்திரன் பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டினர். அப்போது, ரவுடி சுசீந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, இன்ஸ்பெக்டர் கேக் வெட்டி ஊட்டி விட்டு மகிழ்ந்தார். 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் கருணாகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கருணாகரனுடன் இருந்த ரவுடிகள் யார், அவர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். ரவுடி சுசீந்திரன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்றவர் எனக் கூறப்படுகிறது. இதேபோல் பொது இடத்தில் ஒரு சிறுவனை தாக்கியது, மக்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் தாக்குவது என இவர் மீது பொதுமக்கள் மத்தியில் பல புகார்கள் இருக்கிறது. ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!