“மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால்…“ கடுமை காட்டிய எஸ்.பி. | Kancheepuram S.P. warns police officials who support sand mafia!

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (18/02/2018)

கடைசி தொடர்பு:12:21 (18/02/2018)

“மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டால்…“ கடுமை காட்டிய எஸ்.பி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி கடுமையாக நடந்து கொள்கிறார். இதனால், இதுவரை மணல் மாஃபியாக்களுடன் சேர்ந்து பசை பார்த்த காவலர்களுக்கு வருமானம் குறைந்தது. மணல் லாரி ஓட்டுநர் ஒருவர், கடந்த நில தினங்களுக்கு முன் இறந்த காரணத்தை வைத்து எஸ்.பி-க்கு எதிராக காய் நகர்த்திய காவலர்கள் பற்றி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இது தெரிந்து எஸ்.பி. அந்தக் காவலர்களிடம் கடுமைகாட்ட பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

பாலாற்றில் மணல் லாரிகள், மணல் மாஃபியா

காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் மணல் எடுக்கத் தடை உள்ளது. இருந்தபோதிலும் சென்னை மாநகரின் மணல் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மணல் மாஃபியாக்கள் காவல்துறையில் உள்ளவர்களோடு கூட்டுசேர்ந்து கொண்டு பாலாற்றில் மணல் எடுத்து வருகிறார்கள். காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரின் ஆதரவாளர் தினேஷ் என்பவரும் ‘மாயாவி’ சங்கர் என்பவரும் மணல் விவகாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தினேஷ் மீது ஐந்து கொலை வழக்குகள், கொலை மிரட்டல், வெடிகுண்டு வீச்சு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் வேலூர் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மாமண்டூர் பகுதியில் இருந்து மணலை எடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினரின் உதவியோடு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்திவருகின்றனர்.

மணல் லாரிகள்

காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால் எஸ்.பி-யின் தனிப்பிரிவினர் மணல் கடத்தல் லாரிகளைப் பிடித்து வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு மணல் லாரி ஓட்டுநர் சுரேஷ் என்பவர், மணல் கடத்தும்போது லாரியை விட்டு தப்பியோடினார். அப்போது போதையில் இருந்ததால், அவர் ஏரியில் விழுந்து இறந்தார். காவல்துறையினரால்தான் அவர் இறந்ததாகச் சில சமூக அமைப்புகள் காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தின. இதனால் என்ன நடந்தது என காவல்துறையினரை விசாரிக்க எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி‘மணல் விவகாரத்தில் எஸ்.பி. கடுமை காட்டுவதால் காவல்துறையினர் வருமானம் குறைந்தது. இதனால் இந்த எஸ்பி இருக்கும் வரை நம்மால் சம்பாதிக்க முடியாது’ என முடிவெடுத்த சில காவல் அதிகாரிகள் சமூக அமைப்புகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தச் சொல்லி மறைமுகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை விகடன் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம்.  இதையடுத்து எஸ்.பி. சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை தொடர்புகொண்டு, ‘பணம் வாங்குவது நீங்கள்… பழி இன்னொருவருக்கா? இன்னும் 24 மணி நேரத்திற்குள் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டால் அவர்கள் காக்கிச்சட்டையைப் போடமுடியாத நிலை ஏற்படும்’ என கடுமையாக எச்சரித்தார். உடனே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள், இந்தப் பிரச்னையை முடிப்பதற்கு லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய், ஆர்ப்பாட்ட செலவு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் கொடுக்கச் சொல்லி பிரச்னையை முடித்துவிட்டனர். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் காவலர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி தீவிரமாக உள்ளார்.

மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக செயல்படும் காவலர்களுக்கு சவுக்கடி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்