வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (18/02/2018)

கடைசி தொடர்பு:12:10 (18/02/2018)

``காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!'' - திருச்சியில் முழங்கிய கோஷம்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தமிழகத்தில் பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக  திருச்சி தலைமை தபால் நிலையத்தை மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகையிட்டனர்.

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், ஜீவா, ராஜா மற்றும் லதா ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ``காவிரி தீர்ப்பில் வஞ்சகம், மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல், காவிரி உரிமையைப் பறிகொடுத்த தமிழக அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறி தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்திப்பிடித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது போராட்டக்காரர்கள், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வழக்கம் போல் மத்திய அரசுக்குச் சாதகமாகவே வழங்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள், வல்லுநர்கள் கருத்துக்கள் சேகரிக்கப்பட்ட பிறகு கடந்த 2007-ம் ஆண்டு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இப்போது 11ஆண்டுக்குப் பிறகு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என நீரைக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ”மருமகள் இல்லை என்று விரட்டிய பிச்சைகாரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது நான் சொல்கிறேன் இல்லை” என்று சொல்வது போல இருக்கிறது. பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு பரிவுகாட்டிய நீதிமன்றத்துக்குத் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ள மனமில்லை. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மோடியின் மத்திய அரசு, நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு, உள்ளிட்டவற்றை எடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சி செய்வதற்கு இந்தத் தீர்ப்பும் ஒரு உதாரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.

மேலும், இந்தத் தீர்ப்புக்கு எந்தப் பதிலும் வழங்காமல் பதவியை காப்பாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக ராஜினாமா செய்யுங்கள் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மத்திய அரசின் அதிகாரத்தைத் தனிய வைத்த மக்கள் எழுச்சி காவிரிக்காக எழ வேண்டும். டெல்லியின் அதிகாரத்தையும் தனிய வைப்போம் தனிய வைப்போம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தமிழகத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசே தமிழகத்தை அழிக்காதே என மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகத்திற்கு எதிராக உள்ளது எனக் கூறி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து தீர்ப்பிற்கு எதிராகவும்,மத்திய,மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு காவிரிக்காக கோஷங்கள் எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க