வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (18/02/2018)

கடைசி தொடர்பு:15:55 (18/02/2018)

``நட்பே பிரதானம்!’’ - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நெகிழ்ந்த கமல்

அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார். 


ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து வரும் 21-ம் தேதி அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனெவே அறிவித்திருந்தார். அதையடுத்து, அன்று மாலையே மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை கமல்ஹாசன் அறிவிக்கிறார். அரசியல் பயணத்துக்கு முன்பாக, பல்வேறு தரப்பினரையும் கமல் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உள்ளிட்டோரை அவர் அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தார். 

இந்தநிலையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினிகாந்தை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ``அரசியல் பயணத்துக்குச் செல்வதால், அதற்கு முன்பாக பிடித்தவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். அரசியல் பயணம் சிறப்பாக அமைய ரஜினி வாழ்த்துச் சொன்னார். இந்த சந்திப்பு அரசியல்ரீதியானது இல்லை. இந்த சந்திப்பில் அரசியல் இல்லை; நட்புரீதியிலானது. இந்த சந்திப்பில் நட்பே பிரதானமானது’’ என்றார்.