``நடிகர்கள் அரசியலுக்கு வருவது இதனால்தான்’’ - கி.வீரமணி கிண்டல்

"அரசியல் வாதிகள் நடிக்க ஆரம்பித்து விட்டதால் , நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். தற்போது தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல.வெறும் காட்சியாகவே உள்ளது" என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, ``தமிழகத்தில் தற்போது நடப்பது  ஆட்சி அல்ல; வெறும் காட்சியாகவே உள்ளது. `மோடி சொல்லித்தான் அ.தி.மு.க அணிகள் இணைந்தது. மோடி கேட்டுக் கொண்டதால்தான் துனை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்` என ஓ.பி.எஸ். பேசியிருப்பது,  டெல்லி ஆட்டுகிறது நாங்கள் ஆடுகிறோம்; பா.ஜ.கவின் சொல்கேட்டு செயல்பட்டு வரும்  அடிமையாக அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது என்பதை  வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

இந்தநிலை மாறுவதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றுதான் தீர்வு. அரசியல் வாதிகள் நடிக்க ஆரம்பித்து விட்டதால், நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். காவிரி நதி நீர் பிரச்சினையில் நமக்கான நீரின் அளவு குறைந்துள்ளது. இந்த அளவு நமக்கு போதுமானது அல்ல. இந்த  தீர்ப்பினை விட அதனை நடைமுறைப்படுத்த வேண்டி அமைப்புக்களை உருவாக்க வேண்டும். 6 வார காலத்திற்குள்ள காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்பு குழு இரண்டையும் மத்தியரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பது  வரவேற்கத்தக்கது. தமிழகத்தை விட கர்நாடகவிற்கு கண் அசைவு காட்டினால் ஆட்சிக்கு வரலாமா என்ற நப்பாசை மத்திய அரசுக்கு இருக்கிறது. அந்த எண்ணத்தினை மாற்ற வேண்டும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!