வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:17:30 (18/02/2018)

``ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்தது இதற்காகத்தானாம்!’’ - அமைச்சர் அன்பழகன் விளக்கம்

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.கவைக் காப்பாற்றவே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தனர் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தனிச் சட்டத்தின் மூலம் கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. பல்கலைக்கழகத்தின் 81-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று (18.2.2018) காலை 3.30 மணியளவில் சிதம்பரம் வந்தார். பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர் 9.45 மணியளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்திற்கு சென்று நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று கலை, அறிவியல்,மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை உள்ளிட்டபாடப்பரிவுகளில் படித்து ஆராய்ச்சிபட்டம் பெற்ற 295 மாணவர்களுக்குநேரடியாக பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதேபோல பல்கலைக்கழகத்தில் நேரடியாக படித்த 38 ஆயிரத்து 843 பேருக்கும், தொலைதூரக் கல்வி மூலம் படித்துள்ள 3 லட்சத்து 46 ஆயிரத்து 843 பேருக்கு பட்டங்களை வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினரும், சி.பி.ஐ. முன்னாள் இயக்குநருமான கார்த்திகேயன் பேசுகையில், “பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறும் மாணவர்களின் சிந்தனை வித்தியாசமாகவும், புதிய கண்டுபிடிப்புகளை நோக்கியும் இருக்க வேண்டும். புதிய பாதை அமைத்து பிரச்னைகளை வெற்றி கொண்டு, நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும். அதேபோல கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கின்றனர். விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான பாதிப்புகளால் விவசாயம் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். 
எனவே இளைஞர்கள் விவசாயம் தொடர்பாக அதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்தினால்தான் விவசாயம் செழிக்கும். அப்படி செழிக்கும்போது நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களின் கவனம் கிராமம் நோக்கி திரும்பும். நம் நாட்டில் 563 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதிலிருந்து வெளியே வரும் மாணவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தகுதியான வேலைகளுக்குச் செல்கின்றனர். மற்றவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது” என்றார்.

விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனிடம், பிரதமர் மோடி சொல்லிதான் அ.தி.மு.கவில் மீண்டும் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.கவைக் காப்பாற்றவும், அதனை வழிநடத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்படுகிறார்கள். கடந்த 30 ஆண்டுகாலமாக நான் அரசியலில் இருந்தும் சசிகலா குடும்பத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அந்தக் காரணத்தினால்தான் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி மீது பல்வேறு ஊழல் முறைகேடு புகார்கள் வந்ததால் அவர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே லஞ்ச ஒழிப்பு துறையிடம் அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததது. அந்தப் புகாரின் உண்மை தன்மை அறியும் வகையில் தொடர்ந்து விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க