வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (18/02/2018)

கடைசி தொடர்பு:18:00 (18/02/2018)

``காலையில் திருக்குறள்.. மாலையில் சட்டம்’’ - வாக்கி டாக்கி மூலம் அசத்தும் காவல்துறை!

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பாக வாக்கி டாக்கி மூலமாக காலையில் ஒரு திருக்குறள் சொல்லப்படுகிறது. மாலையில் தினமும் ஒரு சட்ட விதிமுறை குறித்து போலீஸாருக்கு காற்றுத் தரப்படுகிறது.

வாக்கி டாக்கி மூலம் பயிற்சி

நெல்லை மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பாக குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நெல்லை மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமார் தலைமையில் எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்த், அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், மதுரை சட்டக் கல்லூரிப் பேராசிரியர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் சட்ட விழிப்பு உணர்வு குறித்து பயிற்சி அளித்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் பேசுகையில், ‘’பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்டந்தோறும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒரு காவலரை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலராக அரசு நியமித்துள்ளது. நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரக் காவல்நிலையங்களில் 76 காவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாகவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முழுமையாகத் தெரிந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்வார்கள். இதற்காகவே அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

சிறப்பு பயிற்சி

நெல்லை மாவட்ட காவல்துறையினருக்காக வாக்கி டாக்கி மூலமாக தினமும் காலையில் ஒரு திருக்குறள் சொல்லப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல மாலையில் தினந்தோறும் ஒரு சட்ட விதிமுறை குறித்துக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, கைது செய்ய வேண்டிய நடைமுறைகள், எந்தக் குற்றத்துக்கு எந்தெந்தப் பிரிவுகளில் வழக்குப் போட வேண்டும், பெண்களைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? என ஏதாவது ஒரு சட்ட விதிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 

இதனை தினமும் சொல்லி விட்டு போய் விடுவதில்லை. அந்தத் தகவலை அவர்கள் கேட்கிறார்களா? என்பதையும் கண்காணிப்போம். இதற்காக காவலர்களிடம் வாக்கி டாக்கி மூலமாகவே கேள்வி கேட்கப்படுகிறது. சரியான பதில் தெரியாவிட்டால் அவர்களுக்கு ’மெமோ’ கொடுக்கப்படுகிறது. அதனால் அனைவருமே மிகுந்த கவனத்துடன் அந்தத் தகவல்களைக் கேட்டுப் பயன் அடைகிறார்கள்’’ என்றார். பின்னர், குழந்தைகளுக்கான விழிப்பு உணர்வு சட்டப் புத்தகத்தை அவர் வெளியிட்டார்.