வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (18/02/2018)

கடைசி தொடர்பு:19:51 (18/02/2018)

லிப்ட் வசதி..குழந்தைகள்,கண் தெரியாதவர்களுக்கு தனிப்பிரிவுகள்..அசத்தும் கரூர் அரசு மாவட்ட மைய நூலகம்!

          மாவட்ட மைய நூலகம்

'ஒரு நூலகம் அமைத்தால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படும்' என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு, மனிதனை மகத்துவமானவர்களாக உருவாக்குவதிலும், தனித்திறமை வாய்ந்தவர்களாக வடிவமைப்பதிலும் நூலகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. 

ஆனால், 'இப்போதைய தலைமுறை அதிகபட்சம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-களில் வரும் தகவல்களைப் படிப்பதோடு சரி; நூலகத்தில் போய் புத்தகங்களையெல்லாம் படிப்பதில்லை' என்ற பொதுவான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பையும் நூலகம் வந்து புத்தகங்கள் வாசிக்க வைக்க, கரூர் மாவட்ட மைய நூலக நிர்வாகம், பல 'புதுசு கண்ணா புதுசு' நடைமுறைகளை கடை பரப்பி, எண்ணற்றவர்களை நூலகத்திற்குள் வரவழைத்துக் கொண்டிருக்கிறது.


 நூலகத்தில் குழந்தைகள்

கரூர் திருவள்ளுவர் மைதானம் எதிரே, கரூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை ஒட்டி அமைந்திருக்கிறது மாவட்ட மைய நூலகம். 1955-ம் வருடம் கிளை நூலகமாக தொடங்கப்பட்ட இந்த நூலகம், 1997-ம் வருடம் மாவட்ட மைய நூலகமாக தரம் உயரத்தப்பட்டது. ஆனால், இன்று தமிழகத்திலேயே சிறந்த மாவட்ட மைய நூலகமாகத் தரம் உயர்ந்து நிற்கிறது. அதற்குக் காரணகர்த்தாவாக சொல்லப்படும் நூலகர் சிவக்குமாரிடம் பேசினோம்.

   மாவட்ட மைய நூலகம்"நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த நூலகத்திற்கு பணிக்கு வந்தேன். அப்போது இங்கு எந்த வசதியும் இல்லாமல், நூலகம் போலவே இல்லாமல் இருந்தது. வெறும் இரண்டு இலக்கத்தில்தான் இங்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை இருந்தது. அதன்பிறகு, நூலக ஊழியர்களோடு சேர்ந்து புதுப்புது முயற்சிகளைச் செய்ய ஆரம்பித்தோம். முதலில் வாசகர் முற்றம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். இந்த அமைப்பு மூலம் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தோம். இந்த அமைப்பு மூலம் மாதத்திற்கு இரண்டு பள்ளிகளின் மாணவர்களை நூலகத்திற்கு அழைத்து வந்து, நூலகப் பதிவேட்டில் கையெழுத்திடுவது முதல் நூலகத்தில் குறிப்பெடுப்பதுவரை நூலகத்தைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வைக்கிறோம். அதேபோல்,ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நூலகத்திற்கு ஒவ்வொரு துறை சார்ந்த அறிஞர்களையும் அழைத்து வந்து பேச வைக்கிறோம்.

மாதம் இருமுறை கரூர் சிறையில் இருக்கும் கைதிகள் மனமாற்றம் பெற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தி பரிசு தருகிறோம். வாசகர் முற்றம் சார்பாக ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்திற்குச் சென்று புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். காத்தாடிய நூலகத்தில் இதனால் புத்தகம் படிக்க வரும் கூட்டம் அதிகரித்தது. ஸ்பான்ஸர்கள் பிடிச்சு அதுக்காக மூன்று லட்சம் ரூபாய் செலவில் இருக்கைகள், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் எல்.சி.டி புரஜெக்டர்னு வாங்கினோம்.
 விழாஅதேபோல், 'லிங்கேஜ் வித் ஸ்கூல்'ங்கிற திட்டத்தை தொடங்கி 15 நாள்களுக்கு ஒருமுறை இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, நூலகத்தில் இருந்து புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குகிறோம். அவற்றை நன்கு படித்து சிறந்தக் குறிப்புகள் எடுக்கும் மாணவர்களுக்கு நூலகம் சார்பில் பரிசும், சான்றிதழும் வழங்குகிறோம். குழந்தைகளை சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்க திசை திருப்ப ஏதுவாக, டாய்ஸ் உள்ளிட்ட குழந்தைகள் விரும்புகிற பொருள்கள் இருக்கும் அமைப்போடு குழந்தைகளுக்கான தனி நூலகப் பிரிவைத் தொடங்கி இருக்கிறோம். இதனால், குழந்தைகளும்  இங்கே புத்தகம் வாசிக்க ஆர்வமாக வர்றாங்க. அதேபோல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் நூலகத்திற்கு வந்து அறிவை பெருக்கிக் கொள்ள வசதியாக 'பிரெய்லி' நூலகப் பிரிவையும் தொடங்கி இருக்கிறோம். நூலகத்தின் மூன்றாவது தளத்தில் போட்டித் தேர்வுகள், பட்டயக் கணக்காளர், ஆசியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.  221 பேர்  இங்கு பயிற்சி பெற்று ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம். எல்லா பயிற்சி வகுப்புகளையும் மாநில அளவில் சிறந்து விளங்குற பயிற்சி மையங்களுக்கு இணையான தரத்தோடு நடத்துகிறோம்..

கரூர் நூலகம்நூலகம் குறித்த வி.சி.டி முக்கியமான ஊர்களில் ஒளிப்பரப்பபட்டு, நூலகத்தின் பயன்கள், உறுப்பினராவது எப்படி, நுலகத்தில் உள்ள வசதிகள் என்று அனைத்து விஷயங்களும் அதில் காட்டப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்திற்கு போவதற்கு வசதியாக 15 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் லிப்ஃட் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட மைய நூலகங்களிலேயே லிப்ஃட் வசதி உள்ள ஒரே நூலகம் எங்க நூலகம்தான். அதோடு இங்கு மின் இதழ்கள் இலவச சேவையையும் தொடங்கி இருக்கிறோம். மேலும் தேவையான நூல்களை நகல் எடுக்க வசதியாக ஜெராக்ஸ் மெஷின், பி.எஸ்.என்.எல் பிராட்பேன்ட் கனெக்‌ஷனுடன் கூடிய ப்ரௌசிங் சென்டர், வாசகர்கள் காலத்தை புதுப்பிக்க வசதியாக, புத்தகங்கள் கால நீடிப்பு செய்வதற்கு போன்றவற்றை ஈ-மெயில் மூலம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மாநில அளவில் சிறந்த செயல்பாட்டிற்காக எங்கள் நூலகம் தேர்வு செய்யப்பட்டு, அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம் இருநது கேடயம் வாங்கி இருக்கிறோம். இந்த நூலகத்தின் வாசகர்கள் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துச்  செயல்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்போ,ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 670 நூல்கள் நூலகத்தில் உள்ளன. தினமும் சராசரியாக 525 பேர் நூலகத்திற்கு வந்து புத்தகங்கள் படித்துச் செல்கின்றனர். இப்போது 20 ஆயிரத்து 223 உறுப்பினர்கள் உள்ளனர். அதோடு இதுவரை நூலகத்திற்கு 122 புரவலர்களையும் சேர்த்துள்ளோம்.

என் தந்தை நூலகரா இருந்தார். பணியில் இருந்தப்போ இறந்ததால், அவரின் வேலை எனக்கு  கிடைச்சுச்சு. அப்போ திருச்சி மீட்டிங்கில் மேலதிகாரி ஒருவர், 'ஈஸியா வேலை கிடைச்சதால்,சேரை தேய்ச்சுக்கிட்டு சுளையா சம்பளம் வாங்குறீங்களா?'-ன்னு கேட்டார். அந்த வார்த்தை தந்த வலிதான் என்னை இப்படிச் சிறப்பா செயல்பட வச்சுருக்கு. நூலகத்தில் எல்லோரையும் ஒரு தடவை கால் பதிக்க வச்சுட்டோம்னா, அவர்களோட கால்கள் கண்டிப்பா காவல்நிலையம்,கோர்ட் படிகளை மிதிக்காது. இப்போ உள்ள இளைய தலைமுறையினர் ஆன்ட்ராய்டு போன்களில் உள்ள உலகத்தை மட்டுமே தேடிக்கிட்டு இருக்கு. ஆனால், அதனால் அவர்களில் பலர் தவறான பாதைக்குதான் செல்கிறார்கள். குற்றங்களும் செல்போன்களால்தான் அதிகரிக்கின்றன. அதனால், நூலகங்களை நோக்கி இளைஞர்களை திசை திருப்பும் முயற்சியில் காலம் முழுக்க ஈடுப்பட்டுக்கிட்டே இருப்பேன்" என்றார் உறுதியாக. வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்...!.
 


டிரெண்டிங் @ விகடன்