வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (18/02/2018)

``ஓ.பி.எஸ்-ஸின் ஒப்புதல் வாக்குமூலம் இதைத்தான் காட்டுகிறது!’’ - ஜி.ராமகிருஷ்ணன் சூசகம்

அணிகள் இணைப்பு குறித்து ஓ.பி.எஸ். பேசியிருப்பது அ.தி.மு.கவிற்குள் ஏற்பட்ட ஏதோ  ஒரு பிரச்னையை உணர்த்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

ramakrishnan speech

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நேற்று (17.2.2018) தொடங்கியது. மாநாட்டின் இரண்டாவது  நாளான இன்று (18.2.2018) தமிழக மீனவர்களின் நலன் பாதுகாத்தல், சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாத்தல், இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தொடர்தல் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு ஆகிய  5 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து செய்தியர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “ நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் முக்கியமானது விவசாயிகள் குறித்த தீர்மானம்தான். நிலுவையிலுள்ள பயிர் காப்பிட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.  வேளாண் விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதலாக விலை தீர்மானிக்கப்படுவதில்லை. ஒற்றை தேசியத்தை திணிக்கக்கூடிய வகையில் இந்தித் திணிப்பை மோடி அரசு செய்துவருகிறது. கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். அதேபோல  ஹரப்பா நாகரிகத்திற்கு சமமான 12 ஆண்டுகளாக வெளியிடப்படாத ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரளா அரசு கொடுத்த சலுகைகளை தமிழகத்திலும் வழங்கிட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அரசு, இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூகமாக தீர்வு காணவேண்டும்.

ஓ.பி.எஸ். அணி மற்றும் இ.பி.எஸ் அணி என அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்து இருந்த போது, இரண்டு அணியையும் இணைத்து தமிழகத்தில் பா.ஜ.க.தான் மறைமுக ஆட்சி செய்து வருகிறது என அனைத்து கட்சியினரும் குற்றம்சாட்டினோம். ஆனால், அப்போது இதற்கு மறுப்புத் தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது மோடி கூறியதால்தான் அணிகள் இணைக்கப்பட்டன என ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திடீரென அவர் இப்படி பேசியது அ.தி.மு.க.விற்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையை உணர்த்துகிறது. ஓரிரு நாளில் அது தெரியவரும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க