குமரி வர்த்தக துறைமுகம் எதிர்ப்பாளர்கள் முதல்வரைச் சந்திக்க திட்டம்!

குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் என்ற பெயரில்  கோவளம் மற்றும் கீழமணக்குடி இடையே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்ப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை (19.2.2018) சந்திக்க உள்ளனர். 

துறைமுகம் திட்ட வரைபடம்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில், தற்போது குமரி அருகே உள்ள கோவளம் முதல் கீழமணக்குடி வரையிலான பகுதியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

ஆனால், வர்த்தக துறைமுகத் திட்டத்தை பெயர் மாற்றம் செய்து மீண்டும் செயல்படுத்த இருப்பதாக பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் கோவளம் முதல் கீழமணக்குடி வரையிலான பகுதியில் விவசாயமும் மீன் பிடித்தொழிலும் அழிந்து போகும் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதனால் ’குமரி சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் அமைப்பைத் தொடங்கி தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த அமைப்பின் சார்பாக தினமும் ஒவ்வொரு கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வர்த்தகத் துறைமுகத்தை எந்தப் பெயரில் கொண்டு வந்தாலும் தொடர்ந்து எதிர்க்கப் போவதாக முகிலன் குடியிருப்பு, கோம்பவிளை, குமாரபெருமாள்விளை, விஜயநேரி, தேரிவிளை உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது என அவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். 

இதனிடையே அரசுத் தரப்பில், துறைமுக அதிகாரிகளும் வருவாய்த்துறையினரும் மக்களைச் சந்தித்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் எனத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்,துறைமுக எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் 19-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்குகிறார்கள். அத்துடன், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு கோரவுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!