வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (18/02/2018)

``மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் 3 தூண்கள் சேதம்!’’ - விரைவில் புனரமைப்புப் பணி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள 3 தூண்கள் சேதமடைந்ததாக வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.  


மதுரை அருள் மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு  கிழக்கு கோபுர வாசல் அருகேயுள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில்   தீ் விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் கோயில் வளாகத்தில் இருந்த பல கடைகள் சேதமடைந்தன. அதில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ அதிதீவிரமாகப் பற்றியது. அதனைத் தொடர்ந்து  தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர் அதற்கு பொதுமக்களும் பெரும் உதவியாக இருந்தனர். 

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு

தமிழக அரசு சார்பில் தீ விபத்துக்கான காரணம் கண்டறியவும் , விபத்து நடந்த பகுதிகளை மீண்டும் சரிசெய்ய நுண்கண்ணாடி, வேதியல் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ஐ.ஐ.டி பேராசிரியர்கள், தொல்லியல்துறை ஸ்தபதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதற்கட்ட ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வு கடந்த 8-ம்தேதி நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து சேதமடைந்த பகுதிகளில் முதற்கட்ட ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (18.2.2018) இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை  தொல்லியல்துறை , காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் கோயில் இணை ஆணையர் நடராஜன்னும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இதுபோன்ற விபத்துகள் நடக்கா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்லப்பட இருப்பதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன 

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வல்லுநர் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், ‘’ தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள 3 தூண்கள் சேதமடைந்துள்ளன. அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேதம் குறித்து முழுமையாகக் கணக்கிட்டு ஆவணப்படுத்திய பின்னர், அவற்றைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள சிலைகள் மற்றும் தூண்கள் சேதமடையாமல் அந்த பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.