வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:21:30 (18/02/2018)

``வாடிவாசலை அலறவிட்ட காளைகள்!’’ - சத்திரப்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறாமல் இருந்தநிலையில், இன்று அரசு சார்பில் நடத்தப்பட்டது.

 

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. பல்வேறு காரணங்களால் சத்திரப்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், சத்திரப்பட்டியில் இன்று (18.2.2018) ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்குபெற்ற அனைத்துக் காளைகளுக்கும் தங்கக்காசு வழங்கப்பட்டு ஊற்சாகப்படுத்தப்பட்டது குறிப்பிடடத்தக்கது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 800 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்தனர். தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாடுபிடி வீரர்களுக்கு வாழ்த்துக் கூறி சென்றார். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சத்திரப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், கடந்த இரண்டு வாரங்களாகவே இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாய் நடைபெற்று வந்தன. மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற்று இவ்விழா நடைபெறுவதால், ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் நடைபெற்றது.


சத்திரப்பட்டி ஊர் மக்கள், பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தருகின்ற காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் வரவேற்று உற்சாகப்படுத்தினர். பார்வையாளர் மாடத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து போட்டியை ரசித்தனர். போட்டியில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 528 காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து பரிசுகளை வென்றனர், இதே போல மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்கி தங்க காசு, வெள்ளி காசு, பிரோ உள்ளிட்ட பல பரிசுகளை வென்றனர். இப்போட்டியில் மங்களகுடியை சேர்ந்த விஜி குமார், 16 மாடுகளைப் பிடித்து சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டு இருசக்கர வாகனத்தைப் பரிசாக பெற்றார். இதேபோல சிறந்த காளைக்கான முதல் பரிசை அய்யூரை சேர்ந்த ராஜேந்திரனின் காளை வென்றது.