’’மக்கள் சேவைக்காகவே வந்திருக்கிறேன்; யாரையும் அசைக்க வரவில்லை!’’- கருணாநிதியைச் சந்தித்த கமல் பேட்டி

அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து வரும் 21-ம் தேதி அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனெவே அறிவித்திருந்தார். அதையடுத்து, அன்று மாலையே மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். அப்போது, கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை கமல்ஹாசன் அறிவிக்கிறார். அரசியல் பயணத்துக்கு முன்பாக, பல்வேறு தரப்பினரையும் கமல் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உள்ளிட்டோரை அவர் அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தார். மேலும், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தையும் அவர் சந்தித்துப் பேசினார். 

இந்தநிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கருணாநிதியைச் சந்திப்பதற்காக வந்த கமல்ஹாசனை, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், வாசலுக்கு வந்து வரவேற்றார். ரஜினியுடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய கமல், அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகத் தமக்குப் பிடித்தமானவர்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். 

கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ‘’என்னுடைய அரசியல் பயணத்துக்காக கருணாநிதியிடம் வாழ்த்துப் பெறவே வந்திருக்கிறேன். அறிவுக்கூர்மை, மக்கள் மீது கொண்ட அக்கறையை உள்ளிட்ட பல்வேறு நல்ல குணங்கள் தலைவர்கள் பலரிடமும் இருக்கிறது. ஆனால், அவற்றில் இவரிடம் தனித்தன்மை இருக்கிறது. கருணாநிதியிடம் இருந்து அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’’ என்றார். உங்களது புதிய கட்சியின் கொள்கையில் திராவிடம் இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கமல், கருத்தியல்கள் பலவற்றில் இருந்தும் நல்ல கருத்துகளை எடுத்து கொள்கையாக வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``எனது கொள்கையைப் புரிந்துகொண்ட பின்னர் அவர்களுடன் (தி.மு.க.) கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்யலாம். மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்; யாரையும் அசைத்துப் பார்ப்பதற்காக அல்ல’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!