வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (18/02/2018)

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிச் சுவரில் அசத்தல் ஓவியங்கள்!

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள காந்திமதி அம்பாள் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியின் சுற்றுச் சுவற்றில் மாணவ, மாணவிகள் வண்ணமயமான ஓவியங்கள் வரைந்து அசத்தினர். இதில் சிறந்த ஓவியங்களை வரைந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  
 

சுவர் ஓவியங்கள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் உள்ள அரசு கட்டடங்களின் சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வ.உ.சி.மைதானம், சித்த மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான சுவர்களை ஓவியங்களைக் கொண்டு அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியரைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டன. அதில் சிறந்த ஓவியங்களை வரைந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகச் சுவரில் இன்று ஓவியம் வரையப்பட்டது.

இந்தப் பள்ளியின் சுவர்களில் திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாகக் காட்சியளித்ததால் அதில் வண்ணமயமான ஓவியங்களை வரையும் முயற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். 

அப்போது பேசிய அவர், ’’நெல்லை மாநகராட்சி ஏற்கனவே தூய்மையான மாநகராட்சிக்கான விருது பெற்றுள்ளது. அதனை நாம் அனைவரும் இணைந்து தொடர்ந்து தூய்மையையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும். உங்களின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இந்தப் பள்ளியின் சுற்றுச் சுவரானது பல்வேறு போஸ்டர்களால் அசிங்கமாக இருந்தது. நீங்கள் அதில் ஓவியம் வரைந்த பின்னர் மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது. அதில் ஏராளமான விழிப்பு உணர்வு கருத்துக்களையும் வரைந்துள்ளீர்கள். இவற்றை நீங்களும் கடைப்பிடித்து உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்’’ என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் தலைமையில், தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.