நேற்று பிறந்தநாள்: இன்று விபத்தில் பலி! - கோவில்பட்டி சிறுமிக்கு நிகழ்ந்த சோகம் | girl child died in road accident

வெளியிடப்பட்ட நேரம்: 23:02 (18/02/2018)

கடைசி தொடர்பு:23:02 (18/02/2018)

நேற்று பிறந்தநாள்: இன்று விபத்தில் பலி! - கோவில்பட்டி சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்

கோவில்பட்டியில் பைக் மீது வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். உயிரிழந்த சிறுமி அன்சிக்கு நேற்று பிறந்தநாள். இன்று அவள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூரணம்மாள் காலனியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி.  இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபா. இவர்களுக்கு அபிஷா(4), அன்சி(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். நேற்றுதான் சிறுமி அன்சிக்கு 2-வது பிறந்தநாள். சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக,  மதுரையில் இருந்து சிறுமியின் சித்தி  காளீஸ்வரி சிறுமியைப் பார்க்க வந்துள்ளார். இன்று மாலையில் சுபா, காளீஸ்வரி மற்றும் தனது இருமகள்களுடன் பைக்கில் வீட்டில் இருந்து பஜாருக்கு செல்வதற்காக வந்துள்ளார்.

கோவில்பட்டி  எம்.எல்.ஏ , அலுவலகம் அருகில் உள்ள எட்டயபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, செந்தட்டியப்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கிச் சென்ற வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தியிலேயே சிறுமி அன்சி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சுபா, அபிஷா மற்றும் காளீஸ்வரி ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்திற்கு செல்லக்கூடிய சாலை சமீபத்தில் தான் நால் வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கோவில்பட்டி நகருக்குள்ள குறிப்பாக கால்நடை மருந்துவமனை முதல் மகளிர் காவல் நிலையம் வரையிலான சாலைப்பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும்.

இது  நகரின் முக்கிய போக்குவரத்துப் பகுதி என்பதால் தனியாங்கி சிக்னல் அமைக்க வேண்டும், எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு உள்ள சந்திப்பு  பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் இன்று விபத்தில் சிறுமி அன்சி உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க