வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (19/02/2018)

கடைசி தொடர்பு:17:03 (12/07/2018)

"காவிரியில் வஞ்சிக்கப்பட்டோம்...ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் மோசம்போகக் கூடாது!" - பொங்கிய நெடுவாசல் பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இன்னும்  மத்திய-மாநில அரசுகள் ரத்துசெய்யாததைக் கண்டித்து, சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி போராட்டம் ஆரம்பித்தார்கள். அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை நம்பி, கடந்த 10 மாதங்களாக தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார்கள். ஆனால், கொடுக்கப்பட்ட  எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படாமல் இருக்கவே, அந்தப் பகுதி மக்கள் மீண்டும் முன்னறிவிப்போடு நேற்று  ஒருநாள் அடையாளக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். 

‎ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக, இரண்டாம் கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை முதலில் நடத்துவதெனவும், மூன்றாம் கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம்12-ம் தேதி, தொடர் போராட்டத்தை  நடத்துவதெனவும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டக்குழு இந்த ஆர்ப்பாட்டப் பந்தலிலேயே அறிவித்தது.

ஆர்ப்பாட்டத்தில், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் பேசும்போது, 'வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதியிலோ அல்லது அதற்குப் பிறகோ, மூன்றாம் கட்டப் போராட்டத்தை நடத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாம் மூன்றாம் கட்டப் போராட்டத்தை நடத்தவேண்டிய வேலை  இருக்காது என்று நான் நம்புகிறேன். காரணம், அன்று வரை இந்த ஆட்சி நீடிக்காது.அதேபோல, மத்திய  பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி, நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் தமிழக அரசும்  சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி அளித்த பிறகு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். நாம் இந்த விசயத்தை மறந்துவிட்டோம் என்று மத்திய அமைச்சர் நினைத்துவிட்டார் போல. அப்படி அல்ல என்பதை நிரூபிக்கத்தான் கட்சி வேறுபாடுகளைக் கடந்து விவசாயிகள் என்ற அடையாளத்துடன் இங்கு ஒன்றுகூடி இருக்கிறோம்.

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுவதுமாக மத்திய-மாநில அரசுகள் கைவிடும் வரை நாம் இந்தப் போராட்டக்களத்தை விட்டு பின்வாங்கக் கூடாது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

அவரைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் பேசும்போது, காவிரி நதிநீர் பங்கீட்டில் பல வருடங்களாக நமது உரிமையை நிலைநாட்டப் போராடினோம். ஆனால், வஞ்சிக்கப்பட்டோம். அதுபோல நெடுவாசல் போராட்டத்திலும் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது. மோசம் போய்விடக் கூடாது' என்றார்.

போராட்ட எதிர்ப்புக் குழுவில்  உள்ள விவசாயப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பேசினார்கள். மாலை 5.55-மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிவுக்குவந்தது. ஆர்ப்பாட்டக் களத்தில் காவல்துறையினரும்  உளவுத்துறையினரும் அதிக அளவில் காணப்பட்டனர்.