வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (19/02/2018)

கடைசி தொடர்பு:07:41 (19/02/2018)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 கோடி உதவி!-பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

கடந்த ஓராண்டில், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்மூலம் 11,855 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 17 கோடியே 82 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்கிறார், மாவட்ட கலெக்டர் ராசாமணி.

கலெக்டர் ராசாமணிஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கலெக்டர் அவர், 'திருச்சி மாவட்டத்தில் 2017-ம் ஆண்டில் மனவளர்ச்சி குன்றிய 9,105 பேருக்கும், தசைச்சிதைவு நோயால் சிறிய அளவில் பாதிக்கப்பட்ட 150 பேருக்கும், கடுமையாக பாதிக்கப்பட்ட 460 பேருக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 272 பேருக்கும் என  மொத்தம் 9,987 பேருக்கு ரூ.15 கோடியே 85 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும், 968 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்து 13 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 43 மாணவ மாணவியர்களுக்கு ரூ.23 ஆயிரம் வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 6 நபர்களுக்கு ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 6 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது.

 மனவளர்ச்சி குன்றிய மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் இல்லங்களில் உள்ள 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, பராமரிப்பு உதவித்தொகை ரூ. 9 லட்சத்து 14 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் 69 சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய மான்யம் ரூ. 82 லட்சத்து 80 ஆயிரம் செலவில் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மனநலம் குன்றிய, தெருக்கள் மற்றம் சாலையோரங்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படும் மீட்புத் திட்டத்தின் கீழ், 8 மாற்றுத்திறனாளிகள் ரூபாய் 12 ஆயிரம் செலவில் மீட்கப்பட்டு, இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் வாகனம், 42 பேருக்கு ரூ. 24 லட்சத்து 71 ஆயிரத்து 280 மற்றும் நவீன செயற்கை அவயம் 25 நபர்களுக்கு ரூபாய் 4 லட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. 10 நபர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 880 மதிப்பில் பிரெய்லி கடிகாரம், 5 நபர்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பில் உருப்பெருக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 76 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கக் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 466 பேருக்கு ரூ. 18 லட்சத்து 77 ஆயிரத்து 806 மதிப்பிலான உதவி உபகரணங்கள் என மொத்தம் 11,855 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 கோடியே 82 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகளைப் பெற்று பயன்பெறலாம்' என்று கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க