தஷ்வந்த்துக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு! வழக்கறிஞர்கள் தகவல்

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சிறுமி ஹாசினி கொலை வழக்கில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தஷ்வந்த்துக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கலாம் என்பதால் பரபரப்பாக இருக்கிறது செங்கல்பட்டு நீதிமன்றம்.

தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றம்

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் ஆறு வயது மகள் ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில், தஷ்வந்த் என்ற இளைஞரை மாங்காடு காவல்துறையினர் கைதுசெய்தனர்.  இதுதொடர்பான வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், இதுவரை 42 ஆவணங்கள், 30 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டன. இறுதிக்கட்ட விவாதம் முடிந்த நிலையில், இரு தரப்பினரும் வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

பிப்ரவரி 19-ம் தேதி, ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று தஷ்வந்த், மாங்காடு காவல் ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 11 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான வழக்கு என்பதால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக, செங்கல்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஷ்வந்த் குற்றாளியா இல்லையா என முதலில் தீர்ப்பு வழங்கப்படும். தஷ்வந்த் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், குற்றம்குறித்து தஷ்வந்த்திடம் கருத்து கேட்கப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாகத் தண்டனை கிடைக்கும். தஷ்வந்த்துக்கு அதிகபட்ச தண்டனையாகத் தூக்கு தண்டனை வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதனால், பரபரப்புடன் காணப்படுகிறது செங்கல்பட்டு நீதிமன்றம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!