வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (19/02/2018)

கடைசி தொடர்பு:11:49 (19/02/2018)

"நிழலையும் சந்தேகித்தால்தான் நிஜ போலீஸ் !" வேட்டையாடு விளையாடு - பகுதி 25

police crime story

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் 

போலீஸ்  தனிப்படை  குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் எஸ்.ஐ.  ஜி.லோகநாதன், பணி ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆனாலும், உற்சாகத்துடனும், அதே போலீஸ் மிடுக்குடனும்  இருக்கிறார். 'வேட்டையாடு- விளையாடு' தொடருக்காக அதிக நாள்கள் நம்முடன் பயணித்த  திரு. ஜி.லோக நாதனின்  அனுபவம்  கேட்போம்."விசாரணை அதிகாரியாக இருக்கக்கூடியவர், தன்னுடைய நிழலையும் சந்தேகப்படக் கூடிய நபராக இருக்க வேண்டும். எங்கள் டீமின் இன்ஸ்பெக்டர் நவீன் சார், நிழலுக்கும் நிழல் விழுமானால் அதையும்கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடியவர். அதுதான் இந்த டீமின் முழுமையான வெற்றிக்குக் காரணம்.  கொள்ளையர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்ததும், அதைச் செயல்படுத்தும் பணிக்கு,  'ஆபரேஷன் ஆந்திரா' என்று பெயரிடப்பட்டது.

போலீஸ் தனிப்படையை இயக்கிய உயரதிகாரிகள்

அப்போதைய (2003) சென்னை போலீஸ் கமிஷனர் கே. விஜயகுமார், வடக்கு இணை கமிஷனர் சி.சைலேந்திரபாபு, துணை கமிஷனர் ஏ.ஜி.மௌர்யா, உதவி கமிஷனர் கே.ஆர். விட்டல்ராமன் ஆகியோர் இந்த டீமை அவரவர் பதவியின் தன்மைக்கேற்ப கண்காணித்து வழி நடத்தினர். போர்க்களத்தில் நிற்கும் சிப்பாய்கள்போல சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், பால்ராஜ் (இப்போது இன்ஸ்பெக்டர்கள்), முதல் நிலைக் காவலர்கள் பரீன்செல்வம், ரமேஷ், தலைமைக் காவலர்கள் கோபால், கன்னையன், ஆகியோருடன் நானும்  அந்த டீமில் இடம் பெற்றிருந்தேன். இன்ஸ்பெக்டர் நவீன் சார், எங்களை வழிநடத்திய வகையில் நேரடிக் களத்தில் இருந்தார்.  டீமில் இடம்பெற்ற தலைமைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்களில் ரமேஷ் தவிர - நான் உள்பட அனைவருமே  பணி ஓய்வு பெற்றுவிட்டோம். உயரதிகாரிகளில்  சைலேந்தர் அய்யா மட்டும் பணியில் இருக்கிறார்.... பொதுவாகவே குற்றவாளிகளைப் பிடிக்க வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளும் போது, போதுமான ஆள் பலம், ஆயுத பலத்தோடு செலவுக்குப் பணமும் அவசியம். பேஸ்ட், பிரஷ், சோப்பு, டவல், கண்ணாடி, சீப்புகளை தோள் பையில் அடுக்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை. இவை மட்டுமல்ல, போலீஸார் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 'ஷேவிங்- செட்' டும் எல்லா ஊர்களிலும் கிடைக்கும்.  நாம் போகும் ஊரில் குளிர் அதிகமாக இருக்கும் என்றால், கம்பளிக் குல்லாவும், தைலமும் எடுத்து வைத்துக்கொள்ளலாம். லைட்டர், டார்ச் லைட், மெழுகுவத்தி  போன்றவை மட்டும் கண்டிப்பாகத் தேவை. வெளியூர் பயணத்துக்கான டீம் தேர்வு முடிவானதும்,  'உங்களுக்கு வேறென்ன வசதிகள் தேவைப்படுகிறது?' என்று நம்மை வழி நடத்தக்கூடிய உயரதிகாரிகள் கேட்பார்கள். அப்போது, 'நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ஸார், இதுவே போதுமானது' என்று சொல்வதற்கு முன், நாம் சொல்வது சரிதானா, என்று சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்போது நாம், சொல்லத் தயங்கிய வார்த்தைகள்தான் 'ஆபரேஷன் ஸ்பாட்'டில் நமக்கே 'ஸ்பாட்' வைக்கிற வார்த்தையாக இருக்கும்.

                                     தனிப்படையில் சிறப்பான சேவைக்கு விருது பெற்ற ஜி.லோகநாதன்

முகம் தெரியாத மாநிலத்தில் எந்த உதவியையும் ஓர் அளவுக்கு மேல், நம்மால் கேட்டு வாங்க முடியாது. அதேபோல், 'அக்யூஸ்ட்' கள் மீதான  கண்காணிப்பை இரவிலும், அவர்களை, செக்யூர் (வளைத்துப் பிடித்தல்) செய்வதைப்  பகலிலும் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்பாட்டில், போலீஸார் எப்படிச் செயல்பட வேண்டும் என்று வகுக்கப்பட்ட  போலீஸ் நடைமுறைக்குப் பின்னால்,  பாதுகாப்பு அம்சம் இருக்கிறது.  நம் தரப்பில் உயிர்ச்சேதமோ, உறுப்புச் சேதமோ ஏற்படாதிருக்க  அந்த நடைமுறைகளை மீறக் கூடாது.  அப்போதுதான், அடுத்த ஆபரேஷனுக்கு  நாம் தயாராக முடியும்! (கவனிக்கவும், காக்கிகளே !)  அதேபோல், வெளிமாநிலப் பயணங்களில் உணவுகளின் மீது காதல் இருக்கக் கூடாது. உடலை முறுக்கேற்றும் உணவும், குடலை பாழ்படுத்தும் உணவும் நம்முடைய ஆபரேஷனை சீர்குலைத்து நமக்கே ஆபரேஷன் பண்ணுகிற நிலைமையை உண்டாக்கிவிடும். டீ, காப்பி போன்ற பானங்களை நாமே தயாரித்து பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். செலவும் குறையும், தரமும் இருக்கும். டீம் வொர்க் என்பது மிகவும் முக்கியம். டீமை லீட் செய்கிறவர் ஒரு நபராக மட்டுமே எப்போதும் இருக்க வேண்டும், அந்த ஒரு நபர் சொல்வதை  மட்டுமே டீமில் உள்ளவர் கேட்க வேண்டும், இதை சத்தியவாக்காகக் காப்பாற்ற வேண்டும். தனித்தனி முயற்சிகள், டீம் லீடரின் கவனத்துக்கே வராமல் மேற்கொள்ளும் தன்னிச்சை முடிவுகள், ஆபத்தில்தான் கொண்டுபோய்விடும்.  ஸ்பெஷல் டீமில்  'தில்' ஆட்களை மட்டுமே சேர்க்க வேண்டும்,  இதில், சமரசம் செய்துகொண்டால், மொத்த முயற்சியும் வீண்தான். குற்றவாளிகளைப் பிடிக்கப்போகும் மாநிலத்தின் மொழி  அறிந்தவர்கள் டீமில் அதிகமாக இருக்க வேண்டும். டீமில் அனைவருக்கும் துப்பாக்கியைக்  கையாளத்  தெரிந்திருக்க வேண்டும். கீழ்நிலைப் பதவியில் இருந்தாலும் 'கன் ஷூட்' தெரிந்திருப்பது  அவசியம். துப்பாக்கியை முதல் முறையாகப் பார்க்கிற ஆட்களை, ஸ்பெஷல் டீம் வண்டியிலேயே ஏற்றக் கூடாது.  

போலீசாருக்கு, சென்னை  'மவுன்ட்'  போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் துப்பாக்கி கொடுத்து, புல்லட்ஸ்களைக் கொடுப்பார்கள், பயிற்சியும் தருவார்கள்.  முறையாக அணுகினால், காவலர்கள் அனைவருமே பயிற்சி பெறலாம். 'நாம்  கான்ஸ்டபிள்தானே, உயர் அதிகாரிகளிடம், 'கன் ஷூட்' பற்றிக் கேட்கலாமா, துப்பாக்கியை நம் கையில் தருவார்களா'?என்று தயங்கியே நின்று விடுகிறவர்கள் போலீஸுக்கு 'அன் -ஃபிட்'  ஆள்கள்தான். நான் பணியில் இருக்கும்போது, அடிக்கடி மவுன்ட் பக்கம் போய் விடுவேன். ஆரம்பத்தில், அதிகாரிகளை நேராகப் போய்ப் பார்த்து என் ஆர்வத்தைத் தெரிவித்தேன். ஒரிருமுறை அதிகாரிகளைச் சந்திப்பதில்  சரியான சூழ்நிலை அமையவில்லை, நானும் முயற்சியைக்  கைவிடவில்லை. என் ஆர்வத்தைப் பார்த்த உயரதிகாரிகள், புல்லட்ஸ், கன் ஆகியவற்றைக் கொடுத்தனர். இப்படி நான்கைந்து முறை நடந்தது. ஒருமுறை, 'எத்தனை புல்லட்ஸ் வேண்டும்?' என்று ஒரு உயரதிகாரி கேட்டார். 'நூறு புல்லட்ஸ்' என்றேன். கொடுத்தார். நூறில் 15 புல்லட்ஸ் மட்டும் மிஸ் அவுட் ஆகி சைடில் போய்விட்டது.  85 புல்லட்ஸ் சரியான வியூவில் ஃபயர்  ஆனது. என்னைத்  தட்டிக் கொடுத்தார். பின்னர், அந்த அதிகாரி யாரிடம் என்ன சொன்னாரோ, தெரியவில்லை, நான் போகும்போதெல்லாம்  100 புல்லட்ஸ் கேட்பேன், கொடுப்பார்கள். பெரும்பாலும், 8,9, 10 என்ற கணக்கில்தான்  புல்லட்ஸ்   மிஸ் ஆகி அவுட் சைடில் போகும். 85 முதல் 90 புல்லட்ஸ் வரை  'எய்ம்'  மிஸ் ஆகாமல் பாய்ன்ட்டில் அடிக்கும். நாம் போலீஸில் எந்தப் பதவியில் இருந்தாலும் ஷூட்டிங் தெரிந்திருப்பது மிகவும் அவசியம்" என்கிறார் லோகநாதன்.
(இந்த ஆபரேஷன் முடிந்தது)

                       போலீஸ் குழு

'செம சார்... !' என்று லோகநாதனைப் பாராட்டி விடைபெற்றபோது,  அன்பர் ஒருவரிடமிருந்து போன் அழைப்பு வந்தது.  "நண்பா, விசாரணை அதிகாரியின் புலனாய்வுப் பாதை, சரியாக இருந்தால், முதல் நிலைக் காவலரை வைத்தே, பெரிய வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம்.  சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெண், கொலை செய்யப்படுகிறார். கொலையாளி குறித்த, எந்தத் தடயமும் இல்லை. மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டதற்கோ, மருத்துவ சிகிச்சை பெற்றதற்கோ, எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், போலீஸார், அக்யூஸ்ட் யாரென்று சரியாக 'ஃபிக்ஸ்' செய்து ஆளைப் பிடித்துவிட்டார்கள். சென்னையின் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருக்கும் ஸ்ரீதார் சார்தான் அப்போது எழும்பூர் போலீஸ் உதவி கமிஷனர்.  'வேட்டையாடு, விளையாடு' தொடரில் வருகிற முதல் நிலைக் காவலர் லோகநாதன் போலவே, அன்று ஸ்ரீதார் சாருக்குக் கிடைத்த அருமையான  முதல்நிலைக் காவலர் தேனி தமிழ்ச் செல்வன்..." என்றதும், போன் இணைப்பில் வந்த அன்பரைப் பார்க்க மின்னலாகப் புறப்பட்டேன்.


 


டிரெண்டிங் @ விகடன்