வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (19/02/2018)

கடைசி தொடர்பு:18:59 (19/02/2018)

`சாகும்வரையில் தூக்கு!’ - தஷ்வந்துக்கு தண்டனை அறிவித்தார் நீதிபதி

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஷ்வந்த்

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இவர்மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, பிறகு ரத்துசெய்யப்பட்டது.

சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தஷ்வந்த், நகைக்காகத் தனது தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விடுமுறை நாள்களிலும்கூட தொடர்ந்து நடைபெற்றுவந்த வழக்கு விசாரணை, கடந்த வாரம் இறுதிக்கட்டத்தை எட்டியது. சுமார் 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று (19-ம் தேதி) தீர்ப்பு அளிக்கப்படும் என்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் காலை 11.35 மணிக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதும் நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டன. செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை சரியாக 3 மணிக்கு வாசித்தார். தஷ்வந்த் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி.  குற்றவாளி தஷ்வந்த் மீதான 302, 363, 366, 354(பி) 21 பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி தெரிவித்து தண்டனையை அறிவித்து வருகிறார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க