பா.ஜ.க-வுக்கு எதிராக ஏன் கொதிக்கிறார் பன்னீர்செல்வம்? - டெல்லியின் 'கர்நாடக தேர்தல் காத்திருப்பு' | Why panneerselvam is against BJP?

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (19/02/2018)

கடைசி தொடர்பு:13:02 (19/02/2018)

பா.ஜ.க-வுக்கு எதிராக ஏன் கொதிக்கிறார் பன்னீர்செல்வம்? - டெல்லியின் 'கர்நாடக தேர்தல் காத்திருப்பு'

பன்னீர்செல்வம்

  அ.தி.மு.க அரசுக்கும் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. ' எடப்பாடி பழனிசாமி அரசைக் கலைக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளதாகத் தகவல் வெளிவருகிறது. அப்படியொரு முடிவை ஆளுநர் எடுத்தாலும், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்தவித சிக்கலும் இருக்கப்போவதில்லை' என்கின்றனர் அ.தி.மு.க-வினர். 

தேனி மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், ' பிரதமர் கூறியதன் பேரிலேயே எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஒன்றாக இணைந்தேன். அப்போதும், எனக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டாம், கட்சியில் மட்டும் பொறுப்பு வகித்துக்கொள்கிறேன்' என்று கூறினேன். ஆனால், பிரதமர் வற்புறுத்தியதன் பேரிலேயே துணை முதல்வராகப் பொறுப்பேற்றேன். அ.தி.மு.க-வை கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்திவந்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினரால் துரோகி என முத்திரை குத்தப்பட்டேன். சசிகலா குடும்பத்தினர் தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டேன். என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், தற்கொலைசெய்துகொண்டிருப்பார்கள்' என வெளிப்படையாகப் பேசியிருந்தார். 

அ.தி.மு.க அரசை மோடிதான் இயக்குகிறார் என அரசியல் மட்டத்தில் வலம் வந்த தகவல்களை, பன்னீர்செல்வம் உறுதிப்படுத்திவிட்டார் என அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம்செய்தனர். 'பிரதமர் கூறியதாலேயே இணைந்தேன் எனக் கூறுகிறார் பன்னீர்செல்வம். இதற்குப் பெயர் கட்டப்பஞ்சாயத்து அல்லாமல் வேறென்ன?' எனச் சாடினார், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். பன்னீர்செல்வத்தின் பேச்சுகுறித்து நேற்று பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ' பன்னீர்செல்வம் பச்சைக் குழந்தையல்ல, அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். பிரதமர் கூறியதால் இணைந்தேன் என்று அவர் கூறியிருப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகிறது. ஏன் நீங்கள் இணைந்திருக்கக்கூடாது என்று நானே அ.தி.மு.க-வின் தலைவர்களிடம் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், பிரதமர் மோடி இதுபோன்ற கருத்துகளை நிச்சயமாக கூறியிருக்க வாய்ப்பில்லை' என்றார். 

பொன்.ராதாகிருஷ்ணன்பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 'அ.தி.மு.க அரசை வீழ்த்துவதற்கு மத்திய அரசு தயாராகிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் உருவாகிவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடியும்வரை அதற்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த சில நாள்களாக அ.தி.மு.க அரசுக்கு எதிராக தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பேசிவருகின்றனர். ' அரிவாளால் கேக் வெட்டக்கூடிய சூழலில்தான் தமிழகம் இருக்கிறது' என தமிழிசை பேசினார். பொன்.ராதாகிருஷ்ணனும், ' தமிழகம் அமைதியாக இருப்பதாகப் பலர் கூறிவருகின்றனர். நிலவரம் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது. இங்கு பலர் நாசவேலையில் ஈடுபட பயிற்சிபெற்றுவருகின்றனர். இது, உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தும் அவர்கள் அரசுக்கு அறிக்கை அளிப்பது இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் இதைக் கண்டு கொள்ளவில்லை. அது, அவர்களுக்கே ஆபத்தாக முடியும்' எனப் பேசியிருந்தார். 

இப்படிப் பேசுவதை எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ரசிக்கவில்லை. ' பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது வடிகட்டிய பொய்' என பன்னீர்செல்வமும் கொதித்தார். தமிழக பா.ஜ.க-வினர் பேசுவதை டெல்லியும் கண்டிக்கவில்லை. 'பிரதமர் கூறியதால்தான் இணைந்தேன்' என்று சொல்வதன்மூலம், 'மோடி எங்களை ஆதரிக்கிறார்' என்பதை நேரடியாகக் குறிப்பிடுகிறார் துணை முதல்வர். ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, களநிலவரங்கள் மாறிவிட்டன. 'திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்துவிட்டது' என்பதை உரக்கச் சொல்ல விரும்புகிறோம். அதையொட்டித்தான் ஆளுநரும் ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறார். கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகக் கள நிலவரங்கள் மாறும்' என்றார் உறுதியாக. 

தமிழிசைஆனால், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கருத்து வேறாக இருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், 'இந்த அரசுக்கு எதிராக ஏதாவது நடக்காதா என சிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடாகத்தான் தமிழக பா.ஜ.க-வினர் பேசி வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தி, அரசுக்கு எதிராக சில விஷயங்களைப் பேசினார். இதே நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் எடுத்துள்ளனர். அதிகாரத்தில் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். இதை, முதல்வர் அலுவலகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

காரணம், எடப்பாடி பழனிசாமியை பன்னீர்செல்வம் கைவிட்டால், அவருக்குத்தான் ஆபத்து என்பதை இருவரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். இருவரில் ஒருவர் விலகிவிட்டாலும், இந்த அரசு நீடிக்காது. 'துணை முதல்வர் பதவியும் கட்சி அதிகாரமும் கிடைக்கிறது' என்பதற்காகத்தான், எடப்பாடி பழனிசாமியிடம் வந்தார் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வத்துக்கு இதைவிட பெரிதாக எந்த வாய்ப்பும் இனி கிடைக்கப்போவதில்லை. எடப்பாடி பழனிசாமியை அனுசரித்துத்தான் அவர் செல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி நீடிக்க வேண்டும் அல்லது தேர்தலை சந்திக்க வேண்டும். இதுதான் தற்போதைய நிலை. ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்றால், மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு வேண்டும். இப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. 18 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வந்துவிட்டது என்றாலும், அரசுக்கு சிக்கல் வரப்போவதில்லை. 

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநர் கொண்டுவருகிறார் என்றால், பா.ஜ.க-வின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியை ஆதரிப்பார்கள். 18 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வின் முடிவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பார்கள். இப்படிச் செய்தால்தான் அரசியல்ரீதியாக அவர்களும் நிலையாக நிற்க முடியும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வர வாய்ப்பில்லை. ' தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களை நம்பியும் காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ-க்களையும் நம்பி ஸ்டாலின் களமிறங்க மாட்டார்' என உறுதியாக நம்புகிறார் முதல்வர். மத்திய அரசின் தூண்டுதலில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆளுநர் கொண்டுவந்தால், தமிழகத்தில் தனக்கான வாய்ப்பையும் பா.ஜ.க இழந்துவிடும். ஆளுநர் ஆட்சி அமைந்தால், தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கிவிடும். கர்நாடக தேர்தல் வரை மத்திய அரசு மௌனம் காக்கும் என்பதை எடப்பாடியும் உணர்ந்து வைத்திருக்கிறார்' என்றார் விரிவாக. 
 


டிரெண்டிங் @ விகடன்