ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வு நடத்தியிருப்பாரா? மதுரையில் பொங்கிய நாராயணசாமி

நாரயணசாமி

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி முதல்வராக  இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வு நடத்தியிருப்பாரா? என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், கடந்த 2-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு, சுமார் 10.30 மணிக்கு தீ பற்றியது. இந்த விபத்தில், கோயில் வளாகத்தில் இருந்த பல கடைகள் சேதமடைந்தன. அதில், அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததால், தீவிரமாகத் தீ பரவியது.  அதைத் தொடர்ந்து,  தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். அதற்கு, பொதுமக்களும் பெரும் உதவியாக இருந்தனர். இந்நிலையில், மீனாட்சியம்மன் கோயிலை பல்வேறு கட்சினரும் பார்வையிட்டுவருகின்றனர். இன்று காலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, மிகப்பெரிய ஊழல் ஆட்சி. பஞ்சாப் தேசிய வங்கியில் ஊழல் நடந்திருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே  தகவல் வந்துவிட்டது. இந்தப் பிரச்னையில், வங்கி அதிகாரிகள் மட்டும் உடந்தையாக இருந்திருக்க முடியாது. இதில் வேறு பலரும் சிக்கலாம். காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு உறுதியாக காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். பி.ஜே.பி-யின் தலையீடு அ.தி.மு.க ஆட்சியில் உள்ளது. இதற்கு பன்னீர் செல்வம் உரையே நல்ல சாட்சி.

தமிழக வளர்ச்சியில் பி.ஜே.பி அரசு அக்கறை காட்டாவில்லை. பல திட்டங்களின்மூலம் மக்களை வஞ்சிக்கிறது மத்திய அரசு. கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர்களைத் தேர்வுசெய்வது மக்கள் கையில்தான் உள்ளது. ஆளுநர் என்னும் உயர் பதவிக்கு கோப்புகளில் கையெழுத்திடுவது உள்ளிட்ட வேறு பல வேலைகள் உள்ளன. ஆய்வு நடத்துகிறேன் என்று குழப்பத்தை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி முதல்வராக  இருந்திருந்தால், ஆளுநர் ஆய்வு நடத்தியிருப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!