வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (19/02/2018)

கடைசி தொடர்பு:14:21 (19/02/2018)

`திராவிட அரசியலைப் பின்பற்றுவேன்' - விஜயகாந்த்தைச் சந்தித்த பின் கமல் பேட்டி!

திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெறுவேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

கமல்ஹாசன்

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் அரசியல் வருகையை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருவரும் தங்கள் மக்கள் மன்றத்தின் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரஜினியைக் காட்டிலும் கமல்ஹாசன் வேகமாகச் செயல்பட்டு வருகிறார். அதன்படி நாளை மறுநாள் அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களைச் சந்திக்கிறேன் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்த அவர் தொடர்ந்து, நேற்று நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். 

பின்னர் நேற்றிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த அவர், இன்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தைச் சந்தித்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியல் பயணத்துக்குச் செல்லும் முன், அரசியலில் எனக்கு மூத்தவர் என்ற முறையில் விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். மேலும் அவரைச் சந்தித்து நீண்ட நாள்கள் ஆவதால் அவரிடம் நலம் விசாரித்தேன். நீங்கள் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்னை விஜயகாந்த் வாழ்த்தினார்" என்றார். முன்னதாக திராவிட அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "திராவிட அரசியலைப் பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்" என்று கூறினார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க