வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (19/02/2018)

கடைசி தொடர்பு:15:40 (19/02/2018)

பெற்றோரின் சண்டையைத் தடுக்கச்சென்ற மகளுக்கு, தந்தையால் நேர்ந்த கொடூரம்!

தாய், தந்தையிடையே ஏற்பட்ட சண்டையைத் தடுக்கச் சென்ற பத்து வயது சிறுமி  வெட்டப்பட்டு பலியானச் சம்பவம்  திருமங்கலம் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த தாய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தப்பி ஓடிய தந்தையைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தந்தையால் கொல்லப்பட்ட மகள்- திருமங்கலம்


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராமநாதபுரத்தில் வசிக்கும் கொத்தனாரான முருகன்- லட்சுமி தம்பதியருக்கு 10 வயது இருளாயி உட்பட மூன்று குழந்தைகள். இந்நிலையில் முருகன், மனைவி லட்சுமிமீது கடந்த சில ஆண்டுகளாக சந்தேகம் கொண்டு,  அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு லட்சுமி, தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், வருவதும்  வாடிக்கையாகி இருந்துள்ளது. நேற்று இரவு முருகன், லட்சுமிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து லட்சுமியைத் தாக்கியிருக்கிறார். இதைப்பார்த்த  மகள் இருளாயி, தாயைக் காப்பாற்ற முயன்றிருக்கிறாள்.  கோடாரி இருளாயி  தலையைப் பிளந்தது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். இதைப்பார்த்து முருகன் வீட்டிலிருந்து  தப்பிச் சென்றார்.

காயமடைந்த லட்சுமி கதறிக்கொண்டு வெளியே வந்து  அருகில் வசிப்பவர்களிடம் நடந்ததைக் கூறியவுடன், காயமடைந்த லட்சுமியை கிராமத்தினர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அறிந்த வில்லூர் போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தப்பி ஓடிய முருகனைத்  தேடி வருகின்றனர். சமீபத்தில் காதலிக்க மறுத்ததாக 13 வயது சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் காப்பற்றப்பட்ட சம்பவம் திருங்கலம் வட்டாரத்தில் நடந்த சோகம் மாறுவதற்குள், தந்தையே பத்து வயது மகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க