வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (19/02/2018)

கடைசி தொடர்பு:16:00 (19/02/2018)

ஒரு வாரத்தில் ஊதிய ஒப்பந்தம் செய்யாவிட்டால்... அரசுக்கு கெடுவிதித்த மின் ஊழியர் சங்கங்கள்

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஒரு வாரத்துக்குள் மின் ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் என்று மின் ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படும் மின் ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தைச் செய்து அறிவிக்கவேண்டும் என்பது உட்பட அது தொடர்பான பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16-ம் தேதி மின்வாரிய 10 ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வின் தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை. 

முன்னதாக, பிப்.15-ம் தேதி தொழிலாளர் நலத் துறையின் ஏற்பாட்டில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  அன்றைய தினம் காலையில் சென்னை, தேனாம்பேட்டை தொழிலாளர் நலத் துறை அலுவலகத்துக்குச் சென்ற சிஐடியு, என் எல்.ஓ., பிஎம்.எஸ். உட்பட 10 சங்கங்களைச் சேர்ந்தவர்களிடம், பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே திட்டமிட்டபடி 16-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி காலைவரை 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் 10 சங்கத்தினரும் ஈடுபட்டனர். 

வேலைநிறுத்தத்தால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கட்டண வசூல் மையங்களில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னையில் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் பாதையில் தடங்கல் ஏற்பட்டபோது, எழும்பூர், அண்ணாசாலை, சேத்துப்பட்டு பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரத்தில் சரிசெய்ய ஊழியர்கள் வரவில்லை. இதனால் இரவு 7.45 மணியிலிருந்து ஒரு மணி நேரம்வரை மின்சாரம் தடைபட்டு, தெருவிளக்குகள் அனைத்தும் அணைந்துவிட்டன. மின்சாரம் சரிசெய்யப்படும்வரை, அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை இரண்டிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு இருட்டாகவே இருந்தது. மற்றபடி பெரிய அளவு பாதிப்பு இல்லை. 

இதற்கிடையில் ஒரு வாரத்துக்குள் மின் ஊழியர் ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அதைக் கணக்கில்கொண்டு, இந்த வாரக் கடைசிக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என கூட்டுப் போராட்டக் குழு முடிவுசெய்துள்ளது. 

கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருள்செல்வன் நம்மிடம் இதைத் தெரிவித்தார்.