பால் கறக்கச் சென்றபோது அதிர்ச்சி! பாய்ந்த சிறுத்தையைக் கொன்ற பால்காரர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டையும் தன்னையும் தாக்க வந்த சிறுத்தையை ஒருவர் அரிவாளால் வெட்டியதில் அந்தப் புலி இறந்தது. அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

ராமமூர்த்தி தனது மாந்தோப்பில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அவர் காலையில் மாடுகளுக்குத் தீவனம் வைத்து விட்டு பால் கறப்பது வழக்கம். நேற்று காலை அவர் மாடுகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு, பால் கறக்கச் சென்றார். அப்போது மாந்தோப்புக்கு ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. அந்தச் சிறுத்தைப்புலி ராமமூர்த்தி வளர்த்து வந்த பசு மாடு ஒன்றின் மீது பாய முயன்றது.

இதைக் கவனித்த ராமமூர்த்தி அருகில் இருந்த கம்பால் சிறுத்தைப் புலியை விரட்ட முயன்றபோது திடீரென சிறுத்தைப்புலி ராமமூர்த்தி மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் அவர் காயம் அடைந்தார். அருகில் இருந்த அரிவாளை எடுத்து சிறுத்தைப்புலியின் முகத்தில் வெட்டியுள்ளார். சிறுத்தைப்புலி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தது. இது குறித்து ராமமூர்த்தி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, கிருஷ்ணகிரி வன ஊழியர்கள் கொல்லப்பட்ட சிறுத்தைப்புலியை மீட்டு அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்ட வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் கொல்லப்பட்ட சிறுத்தைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதன் உடல் அருகில் உள்ள வனப் பகுதியில் புதைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து விவசாயி ராமமூர்த்தி கூறும்போது, நான் பால் கறக்கச் சென்றபோது மாட்டின்மீது சிறுத்தைப்புலி பாய்ந்தது. அதைத் தடுக்க முயன்றபோது என்மீது பாய்ந்தது. இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்காகவே நான் சிறுத்தைப் புலியை அரிவாளால் வெட்டினேன்' என்றார்.

கொல்லப்பட்ட சிறுத்தைப்புலி ஏற்கனவே ஏதோ ஒரு விபத்தில் காயம் அடைந்துள்ளது. இதனால் அதன் கால் பகுதியில் புண் ஏற்பட்டு புழு வைத்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!