வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (19/02/2018)

கடைசி தொடர்பு:14:48 (19/02/2018)

பதறவைத்த சென்னை மாணவர்களின் விபத்து - இரண்டு முறை பல்டி அடித்த சொகுசு கார்

விபத்தில் சிக்கிய கார்


சென்னை முகப்பேரில் அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி இரண்டு முறை பல்டி அடித்தது. காருக்குள் இருந்தவர்கள் மாணவர்கள் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. மாணவர்கள் ஏற்படுத்திய விபத்து, பொதுமக்களைப் பதற வைத்துள்ளது. 

 சென்னை அண்ணாநகர் திருமங்கலத்திலிருந்து, அம்பத்தூர் - வாவின் சாலை வழியாக முகப்பேரை நோக்கி நேற்று மாலை சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றது. அந்த கார், முகப்பேரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அந்தச் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, இரண்டு முறை பல்டி அடித்துக் கவிழ்ந்தது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் சிக்கியவர்களை மீட்க பொதுமக்கள் அருகே சென்றபோது, காரை விட்டு இறங்கிய இரண்டு பேர் தப்பி ஓடினர். இன்னும் இரண்டு நபர்கள், காருக்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள், திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமையிலான போலீஸார், இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த அரை மணி நேரத்திலேயே, அந்த இடத்திலிருந்த கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது.

விபத்து நடந்த இடம்

 போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காருக்குள் இருந்தது பிரபல தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள். அவர்களின் பெற்றோர், சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்கள். இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீஸார், மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

 விபத்துகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, முதலில் எந்த விபத்தும் நடக்கவில்லை என்று தெரிவித்தனர். அதன்பிறகு புகைப்படங்களைக் காண்பித்த பிறகு, விபத்தில் சிக்கியவர்கள் மாணவர்கள் என்று மட்டும் பதிலளித்தனர். அதற்கு மேல் எந்தத் தகவலையும் போலீஸார் தெரிவிக்காமல், கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலான பதிலைத் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த போலீஸார், காரை ஓட்டியவர், அதில் பயணித்தவர்கள்  பற்றிய விவரங்களைச் சொல்ல தயக்கம்காட்டுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. சிபாரிசு காரணமாக வழக்குகூட பதிவுசெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, இந்தச் சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகள் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

 விபத்தில் சிக்கிய சொகுசு கார்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'திருமங்கலத்திலிருந்து அம்பத்தூர் - வாவின் சாலையில் விடுமுறை நாள்களில் கார் ரேஸ் நடப்பது வாடிக்கையாக உள்ளது. பணக்கார வீட்டைச் சேர்ந்தவர்கள் சொகுசு கார், விலை உயர்ந்த பைக்குகளில் ரேஸில் ஈடுபடுகின்றனர். விடுமுறை நாளான நேற்று, அதிக அளவில் போக்குவரத்து இல்லை. விபத்தில் சிக்கிய கார், வந்த வேகத்தில் யார் மீதாவது மோதியிருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். மேலும், இந்தச் சாலை 4 கி.மீ தூரத்துக்கு நேராக  இருப்பதால், அதிவேகத்தில் ரேஸில் ஈடுபடுபவர்கள் செல்கின்றனர். எனவே, மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையில் ரேஸில் ஈடுபடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 
 
 திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் பேசினோம். 'இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கியவர்கள் மாணவர்கள். நண்பர் ஒருவரின் பார்ட்டிக்குச் சென்றபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அவர்களின் எதிர்காலம் கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை. சிபாரிசு எதுவும் இல்லை. வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது' என்றனர்.