ஷாப்பிங் சென்று வீடு திரும்பியபோது நடந்த விபரீதம்- கண்ணெதிரில் கணவனையும் மகளையும் பறிகொடுத்த பெண் | Bank manager and his daughter died in chennai road accident

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/02/2018)

கடைசி தொடர்பு:17:07 (19/02/2018)

ஷாப்பிங் சென்று வீடு திரும்பியபோது நடந்த விபரீதம்- கண்ணெதிரில் கணவனையும் மகளையும் பறிகொடுத்த பெண்

 விபத்தில் பலியான வங்கி அதிகாரி ஆனந்த் மற்றும் அவரது மகள்

குடும்பத்துடன் பைக்கில் சென்ற தனியார் வங்கி மேலாளரும், அவரது மகளும் லாரி மோதி பலியாகினர். ஹெல்மெட் அணியாததால், வங்கி மேலாளர் தலை நசுங்கி இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

சென்னை, பெரவள்ளூர், ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்தவர் ஆனந்த். வடபழனியில் உள்ள தனியார் வங்கி மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி, அனுசுயா. இவர்களுக்கு தனுஸ்ரீ, சஞ்சனா என இரண்டு மகள்கள். ஆனந்த், பாடியில் உள்ள தனியார் கடைக்கு குடும்பத்துடன் பைக்கில் ஷாப்பிங் சென்றார். பொருள்களை வாங்கிவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, பாடி சி.டி.எச் சாலையில் உள்ள பாலத்தில் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில், நான்கு பேரும் நிலைதடுமாறிக் கீழே விழுந்தனர். சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ஆனந்த் பலியானார். அனுசுயா, தனுஸ்ரீ, சஞ்சனா ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். 

 தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தனுஸ்ரீ இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக அனுசுயாவும், சஞ்சனாவும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவர் மனோகரனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 
 விபத்துகுறித்து போலீஸார் கூறுகையில், 'பைக்கை ஓட்டிய ஆனந்த் ஹெல்மெட் அணியவில்லை. இதனால், லாரி மோதியதும் தலை நசுங்கி இறந்துவிட்டார். பைக்கின் முன்பகுதியில் தனுஸ்ரீ இருந்துள்ளார். இதனால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரும் இறந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த அனுசுயாவும் அவரது மடியிலிருந்த மூன்று வயது மகளான சஞ்சனாவும் காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர்' என்றனர். தன் கண்முன்னால் கணவனும், மகள்களும் விபத்தில் சிக்கியதைப் பார்த்த அனுசுயா கதறித்துடித்தது, கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.