வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (19/02/2018)

கடைசி தொடர்பு:17:00 (19/02/2018)

முதல்வர் பதவியை இழந்தது எப்படி? ஓ.பன்னீர்செல்வம் காட்டமான பதில்

ஓ.பன்னீர் செல்வம்

''நான்சிறந்த முறையில் ஆட்சி செய்ததால் என்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்'' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ''நான்சிறந்த முறையில் ஆட்சி செய்ததால் என்னைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர். முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் முதல்வராகப் பதவியேற்க எனக்கு விருப்பம் இல்லை. பதவி வேண்டாம் என மறுத்து விட்டேன். ஆனால், நான் பதவியேற்றால்தான் ஆட்சி மற்றும் கட்சியை வழி நடத்த முடியும் என்ற காரணத்தால் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஜெயலலிதா கட்டிக் காத்த தமிழகத்தை நாம் ஒருபோதும் தவறாக வழி நடத்திவிடக் கூடாது என்று என்னுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டேன். குறிப்பாக வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்னை, சென்னைக் குடிநீர் உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிறப்பாகச் செயல்பட்டு அ.தி.மு.க- வின் நற்பெயரை நிலை நாட்டினேன்.

வர்தா புயல் ஏற்பட்டபோது அதிகாரிகளை அழைத்து எவ்வாறு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து முடித்தேன். மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளைகூட நேரில் இருந்து பார்த்தேன். அது மக்களுக்கும் தெரியும். தமிழரின் அடையாளமான ஐல்லிக்கட்டுப் போட்டிகள் தடைபட்டிருந்த காலகட்டத்தில் டெல்லி வரை சென்று சட்டபடி இந்த விளையாட்டுக்கு அனுமதி பெற்று வந்தேன். அதை உலகமே உற்று நோக்கி பார்த்தது. சென்னை மாநகரக் குடிநீர் பிரச்னையை உணர்ந்து ஆந்திரா முதல்வரை தொடர்பு கொண்டு நீர் பெற்றுத் தந்தேன். இந்த மூன்று சிறப்பான நடவடிக்கையின் மூலமாக என்னை மக்கள் சிறப்பாகச் செயல்படுவதாக உணர்ந்தனர். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. நான் வளர்ந்துவிடுவேனோ என்று அச்சப்பட்டனர். என்னை எப்படியாச்சும் வெளியேற்ற வேண்டும் என தினகரன் ஆசைப்பட்டபடி பல வேலைகளை கச்சிதமாகச் செய்து முடித்தார். முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கியும் காட்டினர்.

காவிரி நீர் விவகாரத்தில் சரித்திரம் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். காவிரி நீர் விவகாரம் 17 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அம்மா கோரிக்கை வைத்தும் உண்ணாவிரதம் இருந்தும்,  7ஆண்டுகளாக அரசிதழில் வெளியிடாதது தி.மு.க அரசு தான். அப்போது தி.மு.க , காங்கிரஸ் கட்சிகள் தான் கூட்டணியில் இருந்தது. ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்திதான் இறுதி தீர்ப்பை பெற்று கொடுத்தார். அதனால் தான் இந்த பிரச்னை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. இந்நிலையில் அதை எப்படி கருணாநிதி பெற்றுக்கொடுத்தார் என கூற முடியும்? என கேள்வி எழுப்பினர்.