`நேருவின் புகழை இந்தப் புத்தகம் நிலைநிறுத்தும்!' - நெகிழ்ந்த சோனியா

கோபண்ணா எழுதியுள்ள `ஜவஹர்லால் நேரு: ஆன் இல்லஸ்ட்ரேடட் பயோகிராபி’ என்ற புத்தகத்துக்கு சோனியா காந்தி, பிராணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆ.கோபண்ணா முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து 'ஜவஹர்லால் நேரு : ஆன் இல்லஸ்ட்ரேடட் பையோகிராபி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை, ஜவஹர்லால் நேருவின் 7,000 புகைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 700 புகைப்படங்களைத் தொகுத்து வரலாற்று நூலாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளைக் கோபண்ணா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், 'இந்நூலுக்கு இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பு சேர்த்துள்ளார்கள். பிரணாப் முகர்ஜி வழங்கிய அணிந்துரையில் இதுவரை ஜவஹர்லால் நேருவுக்கு இதைப் போன்ற ஒரு நூல் இதுவரை வெளிவரவில்லை என்று குறிப்பிட்டு எனது உழைப்பை அங்கீகாரம் செய்திருக்கிறார். மேலும் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாகவும் உறுதி கூறியிருந்தார்.

மேலும் இந்நூலை வெளியிடுவதற்காக சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சமீபத்தில் தலைநகர் டில்லியில் சந்தித்தேன். அன்னை சோனியா காந்தியிடம் இந்நூலின் டிஜிட்டல் நகலை வழங்கினேன். இதற்கு மறுநாளே எனக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். இதில், ‘ஜவஹர்லால் நேரு : ஆன் இல்லஸ்ட்ரேடட் பையோகிராபி’ என்ற அழகிய புத்தகம், நமது முதல் இந்தியப் பிரதமர் மீதுள்ள அன்பு மற்றும் மரியாதை காரணமாக ஏ.கோபண்ணா உருவாக்கியுள்ளார்.

பண்டித நேருவின் புகழைக் களங்கப்படுத்தவும் நமது ஜனநாயக மற்றும் மதச்சார்ப்பற்ற குடியரசை உருவாக்குவதில் அவரது பெரும் பங்களிப்பைத் துடைத்தெரியவும் தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு நடுவே, இந்தப் புத்தகம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலைப் போராட்டம் பற்றியும், குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து பண்டித நேரு கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வை குறித்தும், இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் மிகச் சரளமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. 

நூற்றுக்கணக்கான விசேஷப் புகைப்படங்கள் மற்றும் முழுமையான கட்டுரைகளோடு இந்தச் சிறப்பான புத்தகத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோபண்ணாவுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்தப் பாராட்டுகள். இதனை ஏராளமானோர் வாசித்து மகிழ்வார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டு என்னை ஊக்கப்படுத்தியிருக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பை  மார்ச் மாதம் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்றும் தமிழ் பதிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று கோபண்ணா தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!