ஜெயலலிதா கைரேகை விவகாரம்! - உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க வேட்பாளர் வழக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸின் தேர்தல் விண்ணப்பத்தில் ஜெயலலிதா வைத்ததாகச் சொல்லப்பட்ட கைரேகையில் சந்தேகமுள்ளது. அதைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு சில மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டாக்டர் சரவணன்

''ஏ.கே.போஸின் தேர்தல்  விண்ணப்பத்தில் உள்ளது ஜெயலலிதா கைரேகையே அல்ல. அந்த நேரத்தில் அப்போலோவில் அவர் உயிருடன் இருந்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. அதனால், அவர் ஏற்கெனவே பெங்களூரு சிறையிலும், வேறு ஆவணங்களிலும் வைத்துள்ள கைரேகையுடன் இதை  ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கோரியிருந்தார். பெங்களூரு சிறையிலுள்ள ஜெயலலிதாவின் கைரேகையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட, வழக்கு தீவிரமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில்தான் தமிழக அரசும் ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மத்தை அறியும் வகையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த நிலையில், ''ஜெயலலிதாவின் கைரேகையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவருடைய தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல். எனவே, இந்த வழக்கைத் தடை விதிக்க வேண்டும்'' என்று ஏ.கே.போஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட் மூலம் தடை பெறப்பட்டது. உயர் நீதிமன்ற வழக்கில் தடை போடப்பட்டுள்ள நிலையில், ''ஜெயலலிதா கைரேகை தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் வெளிவருவதால், கர்நாடகா சிறையில் உள்ள ஜெயலலிதா கைரேகையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டுமென்று டாக்டர் சரவணன் இன்று இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'தவறான தகவல்களை அளித்து ஏ.கே.போஸ் தரப்பில் தடை வாங்கியுள்ளார். ஜெயலலிதா தனி மனிதரல்ல, முதலமைச்சராக இருந்தவர். அவருடைய மரணம் பற்றிய மர்மத்தை அறிவதில் அனைவருக்கும் உரிமை உள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!