கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் முதல்முதலாக ஒலிக்க உள்ள சிங்களத் திருப்பலி

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருப்பலிகள் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்
 

கச்சத்தீவில் இம்மாதம் 23, 24 தேதிகளில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவின் முதல் நாளான 23 ம் தேதி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இரவில் சிலுவைப்பாடு நிகழ்ச்சியும் திருப்பலியும் நடைபெறுகிறது. 24 ம் தேதி காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழா திருப்பலி ஆனது முதன் முறையாக சிங்கள மொழியில் திருப்பலி நடைபெற உள்ளது. திருவிழாவின் இறுதி நாளில் பங்கேற்க உள்ள காலே மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க கலந்துகொண்டு சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்கொள்ள உள்ளனர். இவர்களுடன் சிங்கள மக்களும் அதிகமாக கலந்துகொள்ளும் காரணத்தினால், சிங்கள மொழியில் முதன் முதலாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களால் கச்சத்தீவில் உருவாக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா கொண்டாடப்பட்ட காலம் தொடங்கி கடந்த ஆண்டு வரை தமிழ் மொழியில் மட்டுமே திருப்பலி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கைக் கடற்படையினரின் உதவியுடன் கச்சத்தீவில் அந்தோணியாருக்குப் புதிய ஆலயம் எழுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு திருவிழாவின் போது முதல் முறையாக சிங்கள மொழியில் திருப்பலி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!