சென்னையில் பெண் ஊழியர்மீது ஆசிட் வீச்சு - லேப் ஓனரின் கொடூரச் செயல் 

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள லேபில் வேலைபார்த்த இளம் பெண்மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள வாணுவம்பேட்டையில் தனியார் லேப் உள்ளது. அதை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா நடத்திவருகிறார். லேப்பில், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கங்கா (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண் வேலைபார்த்துவந்தார். லேப்பிலிருந்து அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு சென்றனர். அப்போது, உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கங்கா உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் கங்கா மீது ஆசிட்   வீசியது ராஜா என்று தெரியவந்தது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் கங்காவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், லேபில் கங்காவுக்கும் ராஜாவுக்கும் இடையே லேப் ரிப்போர்ட் தொடர்பாக வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, கங்கா மீது ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது. அதில் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு ராஜா, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணை முடிவில்தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!