தீர்ப்பைக்கேட்டு மகளின் படத்தைப் பார்த்து நீதிமன்றத்தில் கதறியழுத ஹாசினியின் தந்தை! 

ஹாசினி தந்தை

குற்றவாளி தஷ்வந்த்துக்குத் தூக்குத்தண்டனை அறிவித்ததை அறிந்து சிறுமி ஹாசினியின் தந்தை மகளின் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்பவர்களின் மனதை உருகவைத்தது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐ.டி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். இதற்காகப் புழல் சிறையில் இருந்து தஷ்வந்த்தைப் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குக் காவல்துறையினர் அழைத்துவந்தனர். தீர்ப்பையொட்டி ஹாசினியின் தந்தை வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்திலேயே அவர் காத்திருந்தார்.
மாலை 3 மணிக்கு தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு தூக்குத்தண்டனையை அறிவித்தார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு ஹாசினியின் தந்தை கண்ணீர்விட்டு அழுதார். தன் மகளின் படத்தைப் பார்த்து அவர் கதறி அழுதது அருகில் இருந்தவர்களின் மனதை உருகவைத்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினியின் தந்தை பாபு, "எனது மகள் இறப்புக்கு நியாயம் கிடைக்க போராடிய மாங்காடு காவல்துறை, ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகளை கொன்ற தஷ்வந்துக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்ததை வரவேற்கிறேன். எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது" என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!