வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (19/02/2018)

கடைசி தொடர்பு:21:30 (19/02/2018)

`இன்னும் எத்தனை பேரைக் கொல்லப்போகிறீர்களோ?' - ஊரில் புகுந்த முதலையைப் பிடித்த மக்கள் ஆவேசம்

ஊருக்குள் புகுந்த முதலையைப் பிடிக்க அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள் வனத்துறையினர். இதனால் முதலையைக் கிராம மக்களே பிடித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். "உங்களது அலட்சியத்தால் இன்னும் எத்தனை பேர்களைக் கொல்லப்போகிறீர்களோ" என ஆதங்கப்படுகிறார்கள் கிராம மக்கள்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தென்கச்சிபெருமாள் நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் குளிக்க கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்றபோது கரையின்மீது சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஏறி வருவதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனா். இதையடுத்து கிராம மக்கள் சிலா் ஒன்று சேர்ந்து முதலையைப் பிடித்து வைத்துக்கொண்டு வனத்துறையினருக்கு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர்கள், வருகிறோம் என்று சொன்ன பிறகு, அதிகாரிகளுக்காகப் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். அவர்கள் வராதபட்சத்தில் ஒரு கட்டையால் கயிற்றைப்போட்டுக் கட்டி வைத்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவா்கள் வரவில்லை என்றதும் கிராம மக்கள் ஒரு மினி லாரியை ஏற்பாடு செய்து அந்த முதலையை அணைக்கரைக்குக் கொண்டுசென்று விட்டுள்ளனர்.

கிராம மக்கள் தரப்பில் ராமன் என்பவர் பேசுகையில், ``அரியலூா் மாவட்டக் கொள்ளிடம் ஆற்றில் நிறைய முதலைகள் இருக்கின்றன. அங்கங்கே முதலைகள் தென்படுகிறது. இதனால் ஆற்றுக்குத் தனியாகச் செல்ல பயமாக இருக்கிறது. அதேபோல் அணைக்கரையிலிருந்து தூத்தூா் குருவாடி வரையிலும் கடந்த ஓர் ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட முதலைகள் கிராமத்துக்குள் வந்துள்ளன. அவற்றை மக்கள் பிடிப்பதும் கொண்டுபோய் விடுவதுமாக இருந்து வருகிறோம்.

அதேபோல் இதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளித்துவிட்டு துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் இருந்த முதலை அவரின் கையைக் கடித்து உள்ளே இழுத்துச் சென்றது. கரையில் இருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நேரத்துக்குப் பின்னர் மீன் பிடிக்கும் வலையை ஆற்றுக்குள் வீசி முருகனின் உடலை மீட்டோம். முதலையால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் காட்டும் அலட்சியத்தை மறுபடியும் காட்ட வேண்டாம்" என்றார் காட்டத்தோடு.