சப்-இன்ஸ்பெக்டர் காயத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு! | Ariyalur: Jallikkattu stops in mid way after Sub inspector injured

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (19/02/2018)

சப்-இன்ஸ்பெக்டர் காயத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு!

அரியலூரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடுவலூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 12 பேர் காயம் ஏற்பட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

                      

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள  நடுவலூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வந்தது. இதில் அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து அலங்கரித்துக்கொண்டு வரப்பட்ட 650-க்கும் மேற்பட்ட காளைகள்  கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க சுமார்  400-க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சீறிவந்த காளைகளை அடக்க முயன்றவர்களும் பார்வையாளர்களும் என 12 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை மாடு முட்டியது. இதில் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்ட பார்த்திபன் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                               

நடுவலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 250 காளைகள் களம் கண்டுள்ளன. கீழமிக்கேல்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் கழுத்தில் மாடு முட்டியதால் மிகவும் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு வசதிகள் சரியாகச் செய்யவில்லை என்று கூறி மாவட்ட நிர்வாகம் போட்டியைப் பாதியிலேயே நிறுத்தியது. ஜல்லிக்கட்டு நடத்த மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் போட்டி பாதியிலேயே காவல் துறையினர் மூலம் நிறுத்தப்பட்டதால், 400-க்கும் மேற்பட்ட வெளியூர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடி வாசலில் அவிழ்த்து விடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன.

இதுகுறித்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் சிலரிடம் பேசினோம். ``மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்டால் சரிவர கொடுப்பதில்லை. 8 பேர் அனுமதி கேட்டால் அதில் இருவருக்கு மட்டுமே போட்டி நடத்த அனுமதிக்கிறார்கள். அப்படி அனுமதித்தாலும் மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆயிரத்தெட்டு குறைகளைச் சொல்லி போட்டி நடத்தவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதேபோல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தினால் அதிகாரிகள், காவலர்களுக்குதான் தலைவலி என்பதால் முடிந்த அளவுக்குத் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்கள். இதனால்தான் பல கிராமங்களில் மாவட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி பெறாமல்  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஜல்லிகட்டுப் போட்டி இளைஞர்களால்தான் சாத்தியமானது. ஆனால், அதிகாரிகள் இதைப் பணிச்சுமையாக நினைத்துக்கொண்டு போட்டிகளைத் தடை செய்வது சரியா'' எனக் கொந்தளித்தனர்.