வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (19/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (19/02/2018)

தேவகோட்டையில் பட்டியலின இளைஞர்கள்மீது தாக்குதல்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தேவகோட்டை அருகே பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டணம் தெரிவித்துள்ளது.   

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி கூறுகையில், ``சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது மேகாரைக்குடி கிராமம் .இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்களான சசிக்குமார், கனி (சிறுவன்) இருவரும் சாதிய வெறியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்தப் பட்டியலின இளைஞர்களைச் சீண்டுவதும் சுவரில் சாதிரீதியாக இழிவாக எழுதியும் சாதி வெறியர்கள் சிலர் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டுள்ளனர். இதையடுத்து சசிக்குமார், கனி ஆகிய இருவரும் தற்போது தாக்கப்பட்டுள்ளனர். தங்களை சாதிரீதியாகத் திட்டி தாக்க வருகிறார்கள் என்பதை அந்த ஊரின் கிராம பெரியவர் என்கிற முறையில் திருநாவுக்கரசு என்பவரிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் முறையிட்டுள்ளனர் .

அவரோ முறையிட வந்த இளைஞர்களிடம், `எங்க பசங்கள பற்றி எங்கிட்ட வந்து குறைகூற வந்துவிட்டாயா’ என்று கூறி மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளனர். சிவக்குமார் மற்றும் கனி ஆகிய இருவர் மீதும் அஜித் ,பிரசாத் ,ரவி ஆகிய 3 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சசிக்குமார், தலையில் 16 தையல் போட வேண்டிய அளவுக்கு படுகாயம் அடைந்தார். சிறுவனான கனிக்கு 5 தையல் போடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளான அஜித், பிரசாத், திருநாவுகரசு மற்றும் ரவி ஆகியோர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச்சட்டம் 2015-ன் கீழ் வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்கள். பட்டியலின இளைஞர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமை அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க