வறியவர்களுக்கு உதவ `கொடை மதில்!' கரூரில் ஹோட்டல் ஒன்றின் `மனிதநேய' முயற்சி!

 வறியவர்களுக்கும்,ஏழைஎளிய, ஆதரவற்ற மனிதர்களுக்கும் உதவுவதற்காக ஹோட்டல் ஒன்று கரூரில் `கொடை மதில்' என்ற முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது.

கரூர் நகரில் அமைந்திருக்கிறது அர்ச்சனா ஹோட்டல். இந்த ஹோட்டல் மற்றும் இன்னும் சில அமைப்புகள் சேர்ந்து ஹோட்டலுக்கு முன்புறம், துணிகள், பொருள்கள் வைப்பதற்கு ஏதுவாக கப்போர்ட் அமைத்திருக்கிறது. அதற்கு,'கொடை மதில்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதோடு,அதன் அருகில் ஒரு பேனரில், 'கொடை மதிலில் நமக்கு தேவையற்ற நல்ல நிலையில் உள்ள துணிகள் மற்றும் பொருள்களை வைக்கலாம். கொடை மதிலில் உள்ள பொருள்களில் தங்களுக்குப் பயன்படும் பொருள்களை ஏழை, எளிய மக்கள் தேர்ந்து எடுத்துச் சென்று பயன்பெறலாம். அனைவரும் கொடுங்கள் எளியவர் பயனடைவர்' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். 

இதுகுறித்து அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசினோம். "எங்க ஹோட்டல் நிர்வாகம் பல சமூக சேவைகளை அடிக்கடி செய்துவரும். பல ஏழைகளுக்கு பல்வேறு வகையில் உதவி வந்தோம். இந்தநிலையில்தான், சில சேவைமனப்பான்மை கொண்ட சமூக அமைப்புகளோடு சேர்ந்து, இந்தக் கொடை மதிலை அமைத்திருக்கிறோம். ஏழைகளுக்கு காசு பணம் கொடுப்பதுதான் உதவி என்பது இல்லை. நம்மிடம் இருக்கும் பயன்படுத்தும் நிலையில் உள்ள நமக்குத் தேவைப்படாத துணிகளைக்கூட கொடுப்பது பேருதவிதான். ஆனால், தனித்தனியா நம்மால் கொடுக்க முடியாது. அதோடு, அப்படிக் கொடுத்தால்கூட ஏழ்மை நிலைமையில் உள்ளவர்கள் அதை வாங்க கூச்சப்படக் கூடும். அதனால்தான், இப்படி ஒரு பொதுவான இடத்தில் வைத்துவிட்டால், யாரும் இல்லாத சமயத்தில் ஏழை, எளிய மக்கள் துணிகளை எடுத்துக் கொள்வார்கள்’’ என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!